16 நாட்களில் மகன் வராவிட்டால் உயிரை மாய்த்துக் கொள்வேன் - தாயார் எச்சரிக்கை
விளையாட்டு மைதானத்திலிருந்த எனது மூத்த மகனை சுட்டுக்கொன்றார்கள். இளையவரை இராணுவத்தினர் பிடித்துச் சென்றார்கள். 11
வருடங்களாகத் தேடிக் கொண்டிருக்கின்றேன். ஆயிரக்கணக்கான பதிவுகளை செய்து விட்டேன். புதிய ஆட்சியாளர்களும் பதில் சொல்வதாகத் தெரியவில்லை. இனியும் என்னால் பொறுக்கமுடியாது. அடுத்த 16 நாட்களில் மகன் வராவிட்டால் என்னுயிரை மாய்த்துக் கொள்வேன் என தாயொருவர் எச்சரிக்கைவிடுத்து நேற்று சாட்சியமளித்தார்.
வருடங்களாகத் தேடிக் கொண்டிருக்கின்றேன். ஆயிரக்கணக்கான பதிவுகளை செய்து விட்டேன். புதிய ஆட்சியாளர்களும் பதில் சொல்வதாகத் தெரியவில்லை. இனியும் என்னால் பொறுக்கமுடியாது. அடுத்த 16 நாட்களில் மகன் வராவிட்டால் என்னுயிரை மாய்த்துக் கொள்வேன் என தாயொருவர் எச்சரிக்கைவிடுத்து நேற்று சாட்சியமளித்தார்.
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் நான்காம் நாள் அமர்வு நேற்று திங்கட்கிழமை பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இதில் சாட்சியமளிக்கும்போதே ஆதிகோவிலடி வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சதாசிவம் பூலோகலட்சுமி என்ற தாயார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2004 ஆம் ஆண்டு எனது மூத்த மகன் சதாசிவம் குமரன் வல்வெட்டித்துறை சிதம்பர் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது இனம் தெரியாத நபர்கள் அழைத்து அவரை சுட்டுக் கொன்று விட்டனர்.
இந்த மீளாத் துயரத்தில் நாம் மூழ்கியிருந்தவேளை அதற்கடுத்ததாக 2005ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் திகதி வழமை போன்றே வேலைக்குச் செல்வதாகப் புறப்பட்ட சதாசிவம் வசீகரன் என்ற எனது இளைய மகனை உடுப்பிட்டி குஞ்சர்கடை சந்தியில் வைத்து இராணுவத்தினர் பிடித்துக் கொண்டு சென்றனர். இதனை நேரில் கண்டவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து கூறினர்.
அரை மணி நேர இடைவெளியில் நாம் அந்த இடத்திற்குச் சென்றோம். அங்கு எனது மகனோ இராணுவத்தினரோ நின்றிருக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து வல்வெட்டித்துறை மற்றும் ஏனைய பிரதேசங்களிலுள்ள இராணுவ முகாம்களில் தேடினோம். தற்போது வரையில் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.
கடந்த காலங்களில் நாம் ஆயிரக்கணக்கான பதிவுகளைச் செய்து விட்டோம். புதிய ஜனாதிபதி எங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தருவார் எனக் கூறினார்கள். அவருக்கு வாக்களித்தோம். 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் எதுவுமே நடக்கவில்லை. எம்மை புதிய ஆட்சியாளர்களும் ஏமாற்றி விட்டார்கள். 11 வருடங்களாக பொறுமையுடன் இருந்தோம். இனியும் எமது மகனை ஒப்படைப்பார்கள் என்று நம்பிக்கையில்லாது போய்விட்டது.
அண்மையில் 56 பெயர் பட்டியல் தம்மிடம் இருப்பதாகக் கூறிக்கொண்டு எமது வீட்டிற்கு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த புலனாய்வாளர்கள் வருகை தந்திருந்தனர். எனது மகன் தொடர்பாக தகவல்களைக் கேட்டனர்.
எனது மகன் உயிருடன் இருப்பதாகவும் கூறினர். ஆனால் அவர் எங்குள்ளார் என்ன நடந்தது என யாருமே கூறவில்லை. தற்போது உங்களிடத்தில் முறைப்பாடு செய்கிறேன். கடந்த காலங்களில் மனித உரிமை ஆணைக்குழு, செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அமைப்புக்களிடமும் முறைப்பாடுகளைச் செய்துள்ளேன். இனி எங்கு முறைப்பாடு செய்வது என்பது தெரியதுள்ளது.
எனது இரண்டு ஆண்பிள்ளைகளையும் இழந்து இன்று மூன்று பெண் பிள்ளைகளுடன் இருக்கின்றேன். என்னால் தொடர்ந்தும் பொறுமை காக்கமுடியாது.
அடுத்த 16 நாட்களுக்குள் நீங்கள் எனது மகன் எங்குள்ளார் என்பதை வெளிப்படுத்தவேண்டும். அவர் உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா என்பதையாவது கூறவேண்டும். இல்லையேல் எனது உயிரை மாய்த்துக் கொள்வேன். அந்தச் செய்தியை நீங்கள் அறிவீர்கள் என கண்ணீருடன் எச்சரிக்கை விடுத்தார்.