Breaking News

தமிழ் மக்களின் நம்பிக்கையை அரசாங்கம் நிறை வேற்றுமா?

முப்­பது வருட கால­மாகத் தொடர்ந்த யுத்த மோதல்கள் முடி­வுக்கு வந்து, ஆறு வரு­டங்­களின் பின்னர் நாட்டில் அமைந்
­துள்ள முத­லா­வது தேசிய அர­சாங்­கத்தின் முத­லா­வது வரவு செலவுத் திட்டம் பெரும் விமர்­ச­னங்­க­ளுக்கும் எதிர்ப்புப் போராட்­டங்­க­ளுக்கும் ஆளா­கி­யி­ருக்­கின்­றது.

மேலோட்­ட­மான பார்­வையில் அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் அள­வற்ற விலை­யேற்­றத்­தினால் பாதிக்கப்­பட்­டி­ருந்த மக்­க­ளுக்கு அவற்றில் விலைக்­கு­றைப்பை ஏற்­ப­டுத்தி நிவா­ரணம் வழங்­கி­யி­ருப்­ப­தாகத் தோற்­றி­னா­லும் ­கூட, அரச சேவை­யா­ளர்கள், இரும்பு வியா­பா­ரிகள், விவ­சா­யிகள், மீன­வர்கள், தோட்டத் தொழி­லா­ளர்­க­ள் ஆகியோருக்கு வர்க்க ரீதி­யான முறையில் நிவா­ர­ணங்­களை இந்த வரவு செலவுத் திட்டம் வழங்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

அதே­நேரம், போரினால் மிக மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டுள்ள வடக்கு கிழக்குப் பிர­தேச மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கும், அவர்­களின் வாழ்க்கை மேம்­பாட்­டிற்கும் அவ­சி­ய­மான முன்­மொ­ழி­வுகள் இந்த வரவு–செலவுத் திட்­டத்தில் காணப்­ப­ட­வில்லை என்றும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது. எதேச்­ச­தி­காரப் போக்­கினைக் கொண்­டி­ருந்த முன்னாள் ஜனா­தி­பதி தலைமை­யி­லான அர­சாங்கம் யுத்த மோகம் கொண்­டி­ருந்­த­தாகக் குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது. யுத்தம் நடை­பெற்ற காலத்தைப் போலவே, யுத்த மோதல்கள் முடி­வுக்கு வந்­த­பின்­ன­ரான காலப்­ப­கு­தி­யிலும் இரா­ணுவச் செல­வி­னங்­க­ளுக்கு அந்த அர­சாங்கம் அதிக நிதியை ஒதுக்­கீடு செய்து வந்­தி­ருந்­தது.

யுத்தம் முடி­வ­டைந்­து­விட்ட போதிலும், பாரிய இழப்­பு­களை விலை­யாகக் கொடுத்து அடை­யப்­பட்ட வெற்­றியை, நாட்டின் தேசிய பாது­காப்பை உறுதி செய்ய வேண்­டி­யது அவ­சியம் என்றும் அதற்­கா­கவே பாது­காப்­புத்­து­றைக்கு அதிக நிதி­யொ­துக்­கீடு செய்­வ­தாக அந்த அர­சாங்கத்தின் தலை­வர்கள் காரணம் கூறி­யி­ருந்­தார்கள். நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி பத­விக்கு, பாரா­ளு­மன்­றத்தில் தனக்­கி­ருந்த பெரும்­பான்மை பலத்தைப் பயன்­ப­டுத்தி மேலும் அதி­கா­ரங்­களை அதி­க­ரித்துக் கொண்ட முன்னாள் ஜனா­தி­பதி ஒரு சர்­வா­தி­காரப் போக்கில் நாட்டை வழி­ந­டத்திச் செல்­கின்றார் என்று அவர் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.

அரச நிர்­வா­கத்தில் மட்­டு­மல்­லாமல், அயல் நாடு­க­ளு­ட­னான உற­வு­களைப் பேணி­ய­திலும் அவர் உள்­நாட்­டிலும், சர்­வ­தேச மட்­டத்­திலும் பெரும் அதி­ருப்­தியைச் சம்­பா­தித்­தி­ருந்தார். பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான யுத்­த­மாகச் சித்­தி­ரிக்­கப்­பட்­டி­ருந்த, விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்தில் இரா­ணுவ ரீதி­யாக வெற்றி பெறு­வ­தற்கு மஹிந்த ராஜ­பக் ஷ இந்­தியா, சீனா, பாகிஸ்தான், அமெ­ரிக்கா போன்ற நாடு­களின் இரா­ணுவ ரீதி­யான ஆத­ர­வையும் உத­வி­க­ளையும் பெற்­றி­ருந்தார். ஆயினும் யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் அவர் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடு­க­ளுடன் மேற்­கொண்­டி­ருந்த நெருக்­க­மான அர­சியல், இரா­ணுவ, பொரு­ளா­தார ரீதி­யான உற­வுகள், அத­னோ­டி­ணைந்­தி­ருந்த கூட்டுச் செயற்­பா­டுகள், அயல்­நா­டா­கிய இந்­தி­யாவை மட்­டு­மல்­லாமல், அமெ­ரிக்கா உள்­ளிட்ட சர்­வ­தேச நாடு­க­ளையும் முகம் சுளிக்கச் செய்­தி­ருந்­தது.

இதனால் உள்­நாட்டில் ஓர் ஆட்சி மாற்றம் என்ற தேவை உண­ரப்­பட்­டி­ருந்­ததைப் போலவே, சர்­வ­தேச மட்­டத்­திலும், இலங்­கையில் ஓர் ஆட்சி மாற்றம் அவ­சியம் என்ற தேவை உண­ரப்­பட்­டி­ருந்­தது. இதன் விளை­வா­கவே, 2015 ஆம் ஆண்டு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ, தேர்­த­லுக்­கு­ரிய காலம் இருந்த போதிலும், வலிந்து நடத்­திய ஜனா­தி­பதித் தேர்­தலில் தோல்­வியைத் தழுவ நேர்ந்­தி­ருந்­தது.

நாட்டில் ஜன­நா­யகத்தைத் தழைக்கச் செய்ய வேண்டும். நல்­லாட்­சியை உரு­வாக்க வேண்டும். எதேச்­ச­தி­காரப் போக்கில் சென்ற அரச நிர்­வா­கத்தில் மாற்­றங்­களை உரு­வாக்கி நாட்டை நல்­வ­ழிப்­ப­டுத்த வேண்டும் என்ற நோக்­கங்­களைக் கொண்ட ஆட்சி மாற்ற முயற்­சி­க­ளுக்கு மக்கள் ஆத­ர­வ­ளித்­தி­ருந்­தார்கள். இத­னை­ய­டுத்து, சர்­வ­தே­சத்தின் ஆசிர்­வா­தத்­துடன், ஜன­வரி மாத ஜனா­தி­பதி தேர்­தலில் ஆட்சி மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

அது மட்­டு­மல்­லாமல், அதனைத் தொடர்ந்து செப்­டெம்பர் மாதம் நடத்­தப்­பட்ட பொதுத் தேர்­த­லிலும் புதிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அணி­யி­ன­ருக்கு ஆத­ர­வாக மக்கள் வாக்­க­ளித்­ததைத் தொடர்ந்து நாட்டில் ஒரு தேசிய அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­டது. நாட்டின் மிக முக்­கி­ய­மான இரண்டு பெரும் அர­சியல் கட்­சி­க­ளா­கிய ஐக்­கிய தேசிய கட்சி மற்றும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி என்­பன இணைந்து இந்தத் தேசிய அர­சாங்­கத்தை அமைத்­தி­ருக்­கின்­றன.

அதன் முத­லா­வது வரவு–செலவுத் திட்­டமே, விமர்­ச­னங்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருக்­கின்­றது. நாட்டில் நல்­லாட்­சியை உரு­வாக்க வேண்டும். இரா­ணுவ மயப்­ப­டுத்தல் நட­வ­டிக்­கை­களைக் கைவிட வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்­றி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மை­யி­லான அர­சாங்­கத்தின் முத­லா­வது வரவு செலவுத் திட்­டத்தில் தேசிய பாது­காப்­புக்கே முன்­னு­ரிமை அளித்து, நிதி­யொ­துக்­கீடு செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது.

புதிய அர­சாங்­கத்தின் 1941.5 பில்­லியன் மொத்தச் செல­வி­னத்தைக் கொண்ட வரவு செலவுத் திட்­டத்தில் முத­லிடம் கொடுத்து, 306.7 பில்­லியன் ரூபாவை பாது­காப்பு அமைச்­சுக்கு ஒதுக்­கீடு செய்­தி­ருக்­கின்­றது. யுத்தம் முடி­வுக்கு வந்து ஏழு வரு­டங்­க­ளாகப் போகின்ற நிலையில், தேசிய ஒருங்­கி­ணைப்பு மற்றும் நல்­லி­ணக்க அமைச்­சுக்கு ஆகக் குறைந்த தொகை­யா­கிய 0.1 பில்­லியன் அதா­வது 100 மில்­லியன் ரூபா நிதி­யொ­துக்­கீடு செய்­தி­ருக்­கின்­றது. ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்ட வேண்டும் இரா­ணுவ மய­மான அரச நிர்­வா­கத்­தையும் ஆட்சி முறை­மை­யையும் மாற்­றி­ய­மைக்க வேண்டும் என்று ஆட்சி மாற்றம் செய்த, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அணி­யி­னரின் இந்தச் செயற்­பாடு பல்­வேறு சந்­தே­கங்­க­ளையே ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்த முன்னாள் ஜனா­தி­பதி யுத்த மோதல்கள் இடம்­பெற்ற வடக்கு கிழக்குப் பிர­தே­சங்­களில் இரா­ணுவ மயப்­ப­டுத்­தப்­பட்ட ஒரு நிர்­வா­கத்­தையே ஊக்­கு­வித்­தி­ருந்தார். அதற்­காக ஏனைய உலக நாடு­க­ளிலும் பார்க்க ஒப்­பீட்­ட­ளவில் அதிக எண்­ணிக்­கை­யு­டைய சிப்­பாய்­களைக் கொண்ட ஒரு இரா­ணுவ கட்ட­மைப்பை உரு­வாக்­கி­யி­ருந்தார். இதனால், ஒப்­பீட்­ட­ளவில் சிறிய நாடா­கிய இலங்கை அதிக எண்­ணிக்கை கொண்ட இரா­ணுவ படை பலத்தைக் கொண்­டி­ருப்­ப­தாக இரா­ணுவ ஆய்­வா­ளர்கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றார்கள். ஆயினும் ஜன­நா­ய­கத்தைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்டும் என்றும் நிறை­வேற்று அதி­கா­ரம் கொண்ட ஜனா­தி­பதி பத­வியை இல்­லாமல் செய்து பாராளு­மன்­றத்தின் பலத்தை அதி­க­ரிக்க வேண்டும் என்ற அர­சியல் முனைப்­புடன் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்ற புதிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்­னைய ஆட்­சியை அடி­யொற்றித்தான் செயற்­ப­டு­கின்­றாரா என்ற ஐயப்­பாட்டை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

முன்­னைய ஆட்­சியில் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்­டு­வ­தற்­காக, இரா­ணு­வத்­தி­ன­ருக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த பொலிஸ் அதி­கா­ரங்கள் நீக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. வடக்கு, கிழக்கில் இரா­ணு­வத்­தினர் முன்­னைய ஆட்­சியைப் போன்று சிவில் நட­வ­டிக்­கை­களில் பகி­ரங்­க­மாக மூக்கை நுழைத்துச் செயற்­பட்­டி­ருந்த போக்கில் மாற்றம் கொண்டு வரப்­பட்­டி­ருக்­கின்­றது. பொது­மக்­களின் அன்­றாட வாழ்க்­கை­யிலும், அவர்­க­ளு­டைய பொதுச் செயற்­பா­டு­க­ளிலும் தீவிர கண்­கா­ணிப்பை மேற்­கொண்டு, அவற்றில் தலை­யிட்டு வந்த இரா­ணு­வத்­தி­ன­ரு­டைய செயற்­பா­டுகள் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­டி­ருக்­கின்­றன. இதனால், யுத்த காலத்தைப் போலவே, இரா­ணு­வத்­தி­ன­ரு­டைய பிர­சன்னம் கார­ண­மாக அள­வற்ற பீதி­யையும் பய உணர்­வையும் கொண்­டி­ருந்த மக்கள் இப்­போது ஓர­ள­வுக்கு நிம்­ம­தி­ய­டைந்­தி­ருக்­கின்­றார்கள். ஆகவே ஒரு சிறிய மாற்­றத்தைத் தவிர வேறு முன்­னேற்றம் எத­னையும் இரா­ணு­வத்­தி­ன­ரு­டைய செயற்­பாட்டில் ஏற்­ப­டுத்­தாத நிலையில் பாது­காப்பு அமைச்­சுக்கு இந்த அர­சாங்கம் ஏன் அதிக அளவில் நிதி­யொ­துக்­கீடு செய்­தி­ருக்­கின்­றது என்­பது விடை­யில்­லாத கேள்­வி­யாகத் தொக்கி நிற்­கின்­றது.

யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்த முன்­னைய அர­சாங்கம் யுத்­தத்தின் பின்னர் நல்­லி­ணக்க முயற்­சி­க­ளுக்கு அதிக முக்­கி­யத்­துவம் அளித்துச் செயற்­பட்­டி­ருக்க வேண்டும். ஆனால் அது நடை­பெ­ற­வில்லை. இனங்­க­ளி­டையே ஐக்­கி­யத்­தையும் நீடித்த சமா­தா­னத்­தையும் நிலை­பெறச் செய்­வ­தற்­காக நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­களை அந்த அர­சாங்கம் செய­ல­ளவில் மேற்­கொள்­ள­வில்லை. மாறாக மேடை­க­ளிலும் நிகழ்­வு­க­ளிலும் மட்டும் வாய­ள­வி­லேயே அந்த நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்று வந்­தன. ஆனால், புதிய அர­சாங்கம் இது­வி­ட­யத்தில் சிறப்­பா­கவும், உளப்­பூர்­வ­மா­கவும் செயற்­படும் என்று எதிர்­பார்த்­தி­ருந்த மக்கள் - குறிப்­பாகத் தமிழ் மக்கள், இலவு காத்த கிளியின் நிலை­மைக்கே தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மீது மிகுந்த நம்­பிக்கை வைத்­துள்ள தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் ஆர்.சம்­பந்தன், கூட்­ட­மைப்­புக்­குள்­ளேயே ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டான நிலைப்­பாட்­டிற்கு மத்­தி­யிலும், புதிய அர­சாங்­கத்தின் கன்னி வரவு செலவுத் திட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளிக்க வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார். வரவு–செலவுத் திட்­டத்தில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்குப் பிர­தே­சத்தின் முக்­கிய பிரச்­சி­னைகள், முக்­கி­ய­மான தேவைகள் என்­பன கருத்­திற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்­ப­தையும். தமிழ் மக்கள் எதிர்­நோக்­கி­யுள்ள அவ­சர பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கான முயற்­சி­களை அரசு முன்­னெ­டுக்கத் தவ­றி­யுள்­ளது என்­ப­தையும் சுட்டிக் காட்டி, வரவு–செலவுத் திட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளிக்கக் கூடாது என்று கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­க­ளா­கிய ஈ.பி.­ஆர்.­எல்.எவ். முத­லிலும், பின்னர் ரெலோவும் தீர்­மா­னித்­தி­ருக்­கின்­றன.

நீண்ட கால­மாக உரிய விசா­ர­ணை­க­ளின்­றியும் விடு­த­லை­யின்­றியும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களைப் பொது­மன்­னிப்­ப­ளித்து விடு­தலை செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என்று, காலக்­கெடு விதித்து உறு­தி­ய­ளித்­தி­ருந்த போதிலும், அந்த உறு­தி­மொ­ழியை அர­சாங்கம் நிறை­வேற்­ற­வில்லை என்­பதைச் சுட்­டிக்­காட்டி, அது தொடர்­பான தமது அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு, வரவு செலவுத் திட்­டத்தின் மீதான வாக்­கெ­டுப்பை ஒரு சந்­தர்ப்­ப­மாகப் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் என்­பது அந்தக் கட்­சி­களின் நிலைப்­பா­டாகத் தெரி­கின்­றது. தமிழ் மக்கள் மத்­தியில் தீவிரம் பெற்­றுள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்­பான விட­யத்தில் அர­சாங்கம் கூடிய கவனம் எடுத்து விரைந்து செயற்­ப­டத்­தக்க வகையில் அழுத்தம் கொடுப்­ப­தற்­கான சந்­தர்ப்­ப­மா­கவும் வரவு– செலவுத் திட்­டத்தின் மீதான வாக்­கெ­டுப்பைப் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் என்­பது அந்தக் கட்­சி­களின் சிந்­த­னை­யாகத் தோன்­று­கின்­றது.

வரவு செலவுத் திட்­டத்தை எதிர்த்து வாக்­க­ளிக்­கக்­கூ­டாது. அவ்­வாறு செய்­வது இரா­ஜ­தந்­தி­ர­மா­காது என்­பது கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­தனின் நிலைப்­பா­டாகும். பிறக்­க­வுள்ள 2016 ஆம் ஆண்டு தமிழ் மக்­க­ளுக்கு மிகவும் முக்­கி­ய­மான ஆண்­டாகும் என்றும் இந்த ஆண்டில் இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காணப்­படும் என்றும், அவர் மிகுந்த நம்­பிக்கை கொண்­டி­ருக்­கின்றார். இந்த நிலையில் தமிழ் மக்­களும் அவர்­களின் அர­சியல் தலை­வர்­களும் மிகவும் பொறுப்­போடும் நிதா­னத்­தோடும் செயற்­பட வேண்டும் என்று அவர் கூறி­யி­ருக்­கின்றார். ஆயினும் அர­சியல் தீர்வு ஒன்றைக் காண்­ப­தற்­கான முயற்­சி­களில் அர­சாங்கம் ஈடு­பட்­டி­ருக்­கின்­றது என்­ப­தற்­கான சமிக்­ஞை­களோ, ஆதா­ரங்­களோ அர­சாங்கத் தரப்பில் இருந்து இன்னும் வெளி­வ­ர­வில்லை. ஆனால், அர­சி­ய­ல­மைப்பில் மாற்றம் கொண்டு வரு­வ­தற்­கான முயற்­சி­களில் அர­சாங்கம் ஈடு­பட்­டி­ருக்­கின்­றது என்ற ஒரு விடயம் மாத்­தி­ரமே வெளிப்­பட்­டி­ருக்­கின்­றது.

அர­சாங்­கத்தின் அர­சி­ய­ல­மைப்புத் திருத்தம் என்­பது, நாட்டில் நடை­மு­றையில் உள்ள தேர்தல் முறை­மையில் மாற்­றத்தைக் கொண்டு வரு­வ­தையே நோக்­க­மாகக் கொண்­டி­ருப்­ப­தாகத் தெரி­கின்­றது. தேர்தல் முறை­மையில் மாற்றம் கொண்டு வரு­வதன் மூலம், இனப்­பி­ரச்­சி­னைக்கு, அர­சியல் ரீதி­யாகத் தீர்வு கிட்டும் என்று கூற முடி­யாது. சுய­நிர்­ணய உரி­மையின் அடிப்­ப­டையில், வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி மிக்க அதி­கா­ரங்­களைக் கொண்­டதோர் அர­சியல் தீர்­வையே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு எதிர்­பார்த்­தி­ருக்­கின்­றது, இத­னையே கடந்த பொதுத் தேர்தல் அறிக்­கையில் தனது நிலைப்­பா­டாக தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. கூட்­ட­மைப்பின் தலை­வரும், எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மா­கிய சம்­பந்தன் கொண்­டுள்ள நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில், 2016 ஆம் ஆண்டு இனப்­பி­ரச்­சி­னைக்கு, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு தனது தேர்தல் அறிக்­கையில் கூறி­யி­ருந்­த­வா­றான ஓர் அர­சியல் தீர்வு ஏற்­ப­டுமா என்­பதை, இன்­றைய அர­சியல் சூழலில் கற்­பனை செய்­து­கூட பார்க்க முடி­யாது.

அறு­பது வருட கால­மாக இழு­ப­றி­பட்டு வரு­கின்ற இனப்­பி­ரச்­சி­னைக்கு இப்­போது ஏற்­பட்­டுள்ள ஆட்சி மாற்­றத்தின் ஊடாக, ஒரு குறு­கிய காலத்­திற்குள் ஓர் அர­சியல் தீர்வைக் கண்­டு­விட முடியும் என்று சொல்­வ­தற்­கில்லை. இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்­கான முயற்­சி­க­ளின்­போது எதிரும் புதி­ரு­மாக இருந்து ஏட்­டிக்குப் போட்­டி­யாகச் செயற்­பட்­டி­ருந்த ஐக்­கிய தேசிய கட்­சியும், சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் ஒன்­றி­ணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்­தி­ருக்­கின்­றன என்­பது என்­னவோ உண்­மைதான். ஆயினும் தமிழ் மக்­க­ளுக்கு அதி­கா­ரங்­களைப் பகிர்ந்­த­ளித்து, அவர்­களை சுய­நிர்­ணய அடிப்­ப­டை­யி­லான உரிமை கொண்­ட­வர்­க­ளாக பேரி­ன­வாதப் போக்­கு­டைய இந்த இரண்டு அர­சியல் கட்­சி­களும் மன­மொப்பி அனு­ம­திக்­குமா என்­பது சந்­தே­கமே. அதற்­கான முயற்­சி­களில் அவைகள் ஈடு­ப­டுமா என்­பதும் கேள்­விக்­கு­ரி­ய­தாகும்.

தற்­போது அர­சோச்­சு­கின்ற கூட்­ட­ர­சாங்­கத்தை அல்­லது தேசிய அர­சாங்­கத்தைப் பத­விக்குக் கொண்டு வரு­வ­தற்­கான நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு வழங்­கி­யி­ருந்­தது. அதே­நேரம் தமிழ் மக்கள் போருக்குப் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் எதிர்­நோக்­கி­யுள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை, காணாமல் போயுள்­ள­வர்­களைக் கண்­டு­பி­டிப்­பது தொடர்­பான முயற்­சிகள், இரா­ணு­வத்தின் வச­முள்ள காணி­களை விடு­வித்து அவற்றில் இருந்து இடம்­பெ­யர்ந்து சென்­றி­ருப்­ப­வர்­களை மீள்­கு­டி­யேற்­றுதல், தமிழ் மாவட்­டங்­களில் குறிப்­பாக வவு­னியா, மன்னார் மாவட்­டங்­களில் தமிழ் அதி­கா­ரி­களை அர­சாங்க அதி­பர்­க­ளாக நிய­மிப்­பது, வட­மா­காண சபையை அதற்­கென குறித்­தொ­துக்­கப்­பட்ட அதி­கா­ரங்­க­ளு­டனும், நிதி­வ­ச­தி­க­ளு­டனும் செயற்­ப­டு­வ­தற்கு வழி­செய்தல், போரினால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­களின் வாழ்­வா­தார முயற்­சி­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுத்து உத­வு­வது போன்ற அவ­ச­ர­மான பிரச்­சி­னை­க­ளுக்குத் தாம­த­மின்றி தீர்வு காண வேண்டும் என்று பல தட­வை­களில் அர­சாங்கத் தரப்­பி­ன­ரிடம் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு நேர­டி­யா­கவும், மறை­மு­க­மா­கவும் கோரிக்­கைகள் விடுத்­தி­ருந்­தது.

அந்தப் பிரச்­சி­னை­க­ளுக்கு உட­ன­டி­யாகத் தீர்வு காணப்­படும் என்று அர­சாங்கத் தரப்­பி­ன­ரு­ட­னான சந்­திப்­புக்­க­ளின்­போது உறு­தி­ய­ளிக்­கப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் நடை­மு­றையில் பேச்சு பல்­லக்கு. தம்பி கால்­ந­டை­யென்று நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது. தமது ஆத­ரவின் மூல­மாக ஆட்­சியைக் கைப்­பற்­றி­யுள்ள அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வ­ளிப்­பது என்­பது பிழை­யான காரி­ய­மல்ல. நீண்ட கால­மாக நெருக்­க­டி­க­ளுக்குள் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்ற மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­தரத் தீர்வு காண்­ப­தற்­காக உடன்­பட்டு, இணைந்து காரி­யங்­களை முன்­னெ­டுக்க வேண்டும் என்ற அர­சியல் போக்­கையும் தவ­றா­னது என்று கூறு­வ­தற்­கில்லை. ஆனால், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் இத்­த­கைய நல்­லி­ணக்க அர­சியல் நட­வ­டிக்­கைகள் நன்­மை­ய­ளிக்­கத்­தக்­கன என்­ப­தற்கு நம்­பிக்கை தரத்­தக்க வகையில் உத்­த­ர­வா­தங்கள் அர­சாங்கத் தரப்­பி­லி­ருந்து வெளிப்­பட்­டி­ருக்க வேண்டும்.

இந்த அர­சாங்கம் தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­களைத் தீர்க்கும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை அது காலக்­கி­ர­மத்தில் எடுக்கும் என்று வாய­ளவில் நம்­பிக்கை வெளி­யி­டு­வது மட்டும் போதாது. அர­சாங்கம் உண்­மை­யி­லேயே பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கு அக்­க­றையும் ஆர்­வமும் கொண்­டி­ருக்­கலாம். ஆனால், அர­சாங்­கத்தின் அந்த நிலைப்­பாடு மக்­க­ளுக்கு நம்­பிக்­கை­ய­ளிக்­கத்­தக்க வகையில் வெளிப்­பட வேண்டும். அந்த நம்­பிக்கை மக்கள் மனங்­களில் ஏற்­ப­டாத வரையில் நல்­லி­ணக்க அர­சியல் என்­பது நம்­பிக்­கை­யற்­ற­தா­கவே இருக்கும். தமிழ் அர­சியல் கைதி­களின் விட­யத்தில் நவம்பர் 7 ஆம் திக­திக்­கி­டையில் முடிவு காணப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். அவர்கள் பிணையில் செல்ல அனு­ம­திக்­கப்­ப­டு­வார்கள். படிப்­ப­டி­யாக ஒரு தொகு­தி­யினர் விடு­தலை செய்­யப்­ப­டு­வார்கள் என்றும் உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது, ஆனால் அந்த உறு­தி­மொழிக்கமை­வாக அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை எடுக்கத் தவ­றி­விட்­டது.

இரு­நூ­றுக்கும் மேற்­பட்ட தமிழ் அர­சியல் கைதி­களில், 39 பேர் மாத்­தி­ரமே பிணையில் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். ஒரு­வ­ரா­வது இன்னும் விடு­தலை செய்­யப்­ப­ட­வில்லை. அர­சாங்கத் தரப்­பினர் தங்­க­ள­ளவில் நல்­ல­வர்­க­ளாக இருக்­கலாம். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோரும் தங்­க­ள­ளவில் நியா­ய­மா­ன­வர்­க­ளாக இருக்­கலாம். ஆனால், அவர்கள் நல்­ல­வர்கள், நியா­ய­மா­ன­வர்கள் என்­பதை மக்கள் தங்­க­ளுக்குள் அறிந்­தி­ருக்க வேண்டும். அந்த நிலைமை ஏற்­படும் வரையில் அவர்கள் எவ்­வ­ள­வுதான் நல்­ல­வர்­க­ளா­கவும் நியா­ய­மா­ன­வர்­க­ளா­கவும் இருந்­தாலும், அதனால் பயன் எதுவும் ஏற்­ப­ட­மாட்­டாது. தமிழ் மக்­களின் அர­சியல் தலைவராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற சம்பந்தன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் என்ற ரீதியிலும் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்கின்ற தமிழர் என்ற வகையிலும், அரசாங்கத்தின் மீது அவர் கொண்டிருக்கின்ற நம்பிக்கையை, அவரை நம்பியிருக்கின்ற தமிழ் மக்களின் மனங்களில் படியச் செய்ய வேண்டும். அதற்கு வெறும் வாய்ப்பேச்சும், வெறும் உறுதிமொழிகளும் பயன்படப் போவதில்லை. அதற்கான நடவடிக்கைகள் செயற்பாடுகள் என்பன முன்னெடுக்கப்பட வேண்டும்.

உறுதிமொழிகளுக்கமைவான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாத வரையில் அவநம்பிக்கையும், அதன் அடிப்படையிலான விமர்சனங்களும் எழுவதைத் தடுக்க முடியாது. அரசாங்கத்தின் வரவு– செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு அடுத்ததாக இரண்டாவது நிலையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிக்கு 237.9 பில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால், போரினால் பாதிக்கப்பட்ட மாகாணங்களாகிய வடமாகாணத்திற்கும், கிழக்கு மாகாணத்திற்கும் குறைந்த அளவு நிதியே ஒதுக்கப்பட்டிருக்கின்றது. நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களில் மேல் மாகாணத்திற்கு முதலிடத்திலும் வடமேல் மாகாணத்திற்கு கடைசி இடத்திலும் நிதியொதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. அதேநேரம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஐந்தாம், ஆறாம் இடங்களிலேயே நிதியொதுக்கீட்டைப் பெற்றிருக்கின்றன. யுத்தத்தினால் சீரழிக்கப்பட்டுள்ள இந்த மாகாணங்களின் மீள்கட்டமைப்பு அல்லது மீள் எழுச்சியைக் கருத்திற்கொண்டு விசேட கவனம் செலுத்தி இந்த நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

மொத்தத்தில் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட விடயத்திலும் சரி, நீண்டகால அடிப்படையிலான அடுத்த ஐந்து வருடத்திற்கான செயற்றிட்டத்திற்கான நிதியொதுக்கீட்டு விடயம், அரசியல் தீர்வுக்கான விடயம் என்பவற்றில், தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ளத்தக்க வகையில் அரசாங்கம் காரியங்களை முன்னெடுக்கவில்லை. இதனால், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுங்கள், அழுத்தங்களின் ஊடாக காரியங்களை நிறைவேற்றப் பாருங்கள் என்பது மக்களின் வேண்டுகோளாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது. இதனை தமிழ்த்தேசிய கூட்டமைப்பும், அதன் தலைமையும் புரிந்து கொள்ள வேண்டும்.