உயர் வளர்ச்சியை பதிவு செய்துள்ள லிட்ரோ காஸ்
தேசிய திரவ பெற்றோலிய வாயு விற்பனை நிறுவனமான லிட்ரோ காஸ்,நடப்பு ஆண்டின் முதல் 10 மாதங்களில் இல்லங்களுக்கான
தனது விற்பனை 30 சதவீதத்தால் அதிகரித்துள்ளதென அறிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட விலைக்குறைப்பு காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
12.5 கிலோகிராம் எரிவாயு சிலின்டர் ஒன்றின் விலையை மேலும் குறைப்பது என்பது தொடர்பில் அரசாங்கத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருந்த தீர்மானம் காரணமாக சிலின்டர்கள் விற்பனையில் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டின் இறுதியில் மேலும் விற்பனை அதிகரிக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த ஒரு ஆண்டில் அறிவிக்கப்பட்ட விலைக்குறைப்பு குறிப்பிடத்தக்களவு அதிகமாக அமைந்துள்ளது. (44சதவீதம்), இது குறைந்த மற்றும் மத்தியளவு வருமானமீட்டும் குடும்பங்களுக்கு அனுகூலம் பயப்பதாக அமைந்துள்ளது.
நாட்டின் நகர மற்றும் கிராமிய மட்டங்களைச் சேர்ந்தவர்களை பாரம்பரிய அடுப்புகளிலிருந்து திரவ பெற்றோலிய வாயு அடுப்புகளுக்கு மாறுவதற்கு வழிவகுத்திருந்தது.
மொத்த சந்தையில் 73 சதவீதமான சந்தைப் பெறுமதியை லிட்ரோ காஸ் தன்னகத்தே கொண்டுள்ளது. இது நாட்டின் அதிகரித்துச் செல்லும் திரவ பெற்றோலிய வாயு தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
லிட்ரோ காஸ் லங்கா லிமிட்டெட் நிறைவேற்று தலைவர் ஷலில முனசிங்க கருத்து தெரிவிக்கையில்,
“கடந்த10 மாத காலங்களில் நாம் மிகவும் நேர்த்தியான வினைத்திறனை பதிவு செய்திருந்தோம். எமக்கு சாதகமான சந்தைச் சூழ்நிலையும் காணப்பட்டது. எமது அதிகரித்த களஞ்சியப்படுத்தல் கொள்ளளவு மற்றும் விற்பனை வழிகள் மூலமாக, எமது எதிர்காலத் திட்டங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன்,நாட்டின் ஒவ்வொரு இல்லத்துக்கும் எமது திரவ பெற்றோலிய வாயு சேவையை விஸ்தரிக்கும் நோக்கத்தை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது” என்றார்.
அம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள திரவ பெற்றோலிய வாயு டேரமினலை நிறுவனம் அண்மையில் பூர்த்தி செய்திருந்தது. இதில் 3000 மெட்ரிக்டொன் களஞ்சியப்படுத்தும் கொள்ளளவு காணப்படுகிறது.
இந்த புதிய உள்ளடக்கத்துடன்,லிட்ரோ காஸின் மொத்த களஞ்சியப்படுத்தல் வசதி என்பது தற்போது 11000 மெட்ரிக் டொன்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கெரவலபிட்டிய பகுதியில் அமைந்துள்ள பிரதான திரவ பெற்றோலிய டேர்மினலில் 8000 மெட்ரிக் டொன் களஞ்சியப்படுத்தும் வசதி காணப்படுகிறது.
தனது நிரப்பும் செயற்பாடுகளை நவீன வசதிகள் கொண்ட மீள்நிரப்பும் பகுதி அமைந்துள்ள கெரவலபிட்டியவுக்கு இடம்மாற்றியுள்ளது.
ஆசிய பிராந்தியத்தில் காணப்படும் மாபெரும் திரவப் பெற்றோலிய வாயு நிரப்பும் நிலையங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது.
லிட்ரோ காஸ் முகாமைத்துவ பணிப்பாளர் முதித பீரிஸ் கருத்து தெரிவிக்கையில்,
“அம்பாந்தோட்டையில் நாம் அண்மையில் நிறுவியிருந்த புதிய டேர்மினலில் நிர்மாணப் பணிகள் பூர்த்தியுடன்,இதற்கு அருகாமையில் மற்றுமொரு நிரப்பும் நிலையத்தை நிறுவும் பணிகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். இது தெற்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த நுகர்வோருக்கு பெருமளவு அனுகூலங்களை சேர்க்கும் வகையில் அமைந்திருக்கும்” என்றார்.
லிட்ரோ காஸ் லங்கா லிமிட்டெட் இலங்கையில் திரவப் பெற்றோலிய வாயு விற்பனையில் முன்னோடியாக திகழ்கிறது. இதன் துணை நிறுவனமாக லிட்ரோ காஸ் டேர்மினல் லங்கா (பிரைவட்) லிமிட்டெட் இயங்கி வருகிறது.
விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் சமிந்த எதிரிவிக்ரம கருத்து தெரிவிக்கையில்,
“எமது விற்பனையில் பெருமளவு அதிகரிப்பை நாம் அனுபவித்து வருகிறோம். நாடு முழுவதிலும் திரவ பெற்றோலிய வாயுவுக்கான கேள்வி அதிகரித்துள்ளது. எமது விநியோக பகுதிகள் மற்றும் விற்பனை பகுதிகள் ஆகியவற்றை தொடர்ச்சியாக விஸ்தரித்த வண்ணமுள்ளோம். இதன் மூலம் எமது பிரசன்னம் மேம்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
தற்போது லிட்ரோ காஸ் நாடு முழுவதையும் சேர்ந்த தனது 5000 விற்பனை மையங்களின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. பாதுகாப்பு நியமங்களைக் கடுமையாக பேணுவதற்காக லிட்ரோ காஸ் நன்மதிப்பைக் கொண்டுள்ளது.
கம்பனியின் கொள்கையில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாக கருதப்படுகிறது.