பெப்ரவரியில் இலங்கை வருகிறார் மனித உரிமை ஆணையாளர்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படு
கின்றது. இந்த விஜயத்தின் போது அவர் அரசாங்க தரப்பின் முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் வட பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
அத்துடன் வடக்கு விஜயத்தின்போது வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனையும் சந்தித்து ஐக்கிய நாடு கள் மனித உரிமை ஆணையாளர்
செய்ட் அல் ஹுசேன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
விசேடமாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணை பொறிமுறைக் கட்டமைப்பில் வட மாகாணத்தின் பங்களிப்பு முக்கியத்துவமிக்கதாக உள்ளதால் இந்த சந்திப்பு நிச்சயம் இடம்பெறும் என தெரியவருகின்றது.
இதேவேளை முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணை பொறிமுறைக் கட்டமைப்பு குறித்த செயற்பாடுகளை மதிப்பீடு செய்வதும் அது தொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதுமே செய்ட் அல் ஹுசேனின் இலங்கை விஜயத்தின் முக்கிய நோக்கமாகவுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் எட்டாம் திகதி நாட்டில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரை இலங்கை வருமாறு அழைப்பு விடுத்திருந்தது.
கடந்த வருடம் ஜூன் மாதம் ஜெனிவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 29 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர செய்ட் அல் ஹுசேனை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு நேரடியாக அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வருவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இணங்கியிருந்ததாக கூறப்பட்டது. அந்தவகையிலேயே அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் அல் ஹுசேன் இலங்கை வரவுள்ளதாக தெரியவருகின்றது.
ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.