ஜனவரி முதல் 117 நீதிபதிகளுக்கு இடமாற்றம்
சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த 18 நீதிபதிகள் உள்ளிட்ட 117 நீதிபதிகளுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு
வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவித்தல் நீதிச் சேவை ஆணைக்குழு ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளவர்களில் முக்கியமான பல வழக்குகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவோரும் உள்ளடங்குகின்றனர்.
நீதிச் சேவை ஆணைக்குழு வழங்கியுள்ள குறித்த இடமாற்றங்களின் பிரகாரம்,
தற்போது மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியாக கடமையாற்றும் டி.எல்.ஏ.மனாப் வவுனியா மாவட்ட நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார். கல்முனை மாவட்ட நீதிவான் எம்.பி.மொஹிதீன் மட்டக்களப்பு மாவட்ட நீதிவானாக இடமாற்றப்பட்டுள்ளார். மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அப்துல்லாஹ் திருகோணமலை மாவட்ட நீதிவானாகவும், பருத்தித் துறை மாவட்ட நீதிவான் கணேசராஜா மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியாகவும் இடமாற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் வவுனியா மாவட்ட நீதிபதி வீ.ராமகமலன் கல்முனை மாவட்ட நீதிபதியாகவும், திருகோணமலை மாவட்ட நீதிபதி டி.ஜே.பிரபாகரன் கிளிநொச்சி மாவட்ட நீதிபதியாகவும், கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஜூட்சன் மல்லாகம் மாவட்ட நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றின் மேலதிக நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் ஊர்காவற்றுறை மாவட்ட நீதிபதியாகவும் வாழைச்சேனை மாவட்ட நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றின் மேலதிக நீதிவானாகவும், மல்லாகம் மாவட்ட நீதிபதி சதீஷ்தரன் யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவானாகவும், யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் பி. சிவகுமார் பருத்தித் துறை மாவட்ட நீதிபதியாகவும் இடமாற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் மல்லாகம் மேலதிக மாவட்ட நீதிபதியாக உள்ள திருமதி ஜே.கருப்பையா யாழ். சிறுவர் நீதிமன்றின் நீதிபதியாகவும் பொத்துவில் மாவட்ட நீதிபதி ஐ.பி.ரஸாக் கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவானாகவும் ஊர்காவற்றுறை மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமார் வவுனியா மேலதிக நீதிவான் நீதிமன்ற நீதிபதியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் வவுனியா மேலதிக மாவட்ட நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் வாழைச்சேனை மாவட்ட நீதிபதியாகவும் அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி எச்.எம்.எம்.பசீல் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவானாகவும் கிளிநொச்சி மாவட்ட நீதிபதி எம்.ஐ.நஹாப்தீன் பொத்துவில் மாவட்ட நீதிபதியாகவும் நீதிவான் பயிற்சிக் நிறுவனத்தின் நீதிபதி என். கந்தசாமி அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாகவும் இடமாற்றப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு மேலதிகமாக 5 மாணவர் கடத்தல், வஸீம் தாஜுதீன் கொலை விவகாரம் மற்றும் நிதிக் குற்றங்கள் தொடர்பிலான பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரணை செய்யும் நீதிபதிகளுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பு மேலதிக நீதிவான் நிரோஷா பெர்னாண்டோ கொழும்பு பிரதான நீதிவானாக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் தற்போதைய கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பிலப்பிட்டிய கொழும்பு மேலதிக மாவட்ட நீதிவானாக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் கொழும்பு மேலதிக நீதிவான் ஏ.டி.என்.பெர்னாண்டோ நீர்கொழும்பு மாவட்ட நீதிவானாகவும் கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் மாத்தறை மாவட்ட நீதிபதியாகவும் கோட்டை மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே பாணந்துறை நீதிவானாகவும் இடமாற்றப்பட்டுள்ளனர்.
இந்த இடமாற்றங்கள் யாவும் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.