மாணவர்களுக்கான இலவச சீருடை வவுச்சர்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள்
பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடைத்துணிகளுக்கு பதிலாக அரசாங்கத்தினால் இம்முறை வழங்கப்பட்ட பண வவுச்சர்கள் தொடர்பாக
பல்வேறு குற்றச்சாட்டுக்களை பெற்றோர், ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
பண வவுச்சர்களைப் பெற்றுக்கொள்வதற்காக ஆரம்ப வகுப்பு (தரம் 1 முதல் 5 வரை) மாணவர்களின் பெற்றோர் பாடசாலைக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அதன் காரணமாக தாங்கள் தொழிலுக்கு செல்லாமல் சீருடைத்துணியை பெற்றுக்கொள்வதற்காக பாடசாலைகளுக்குச் சென்று நீண்ட வரிசையில் காத்து நின்று பண வவுச்சர்களை பெற வேண்டியிருந்ததா கவும், 420 ரூபா முதல் 720 ரூபா வரையான பெறுமதியுடைய பண வவுச்சர்களைப் பெற்றுக்கொள்வதற்காக தொழிலுக்குச் செல்லாமல் தமது நாளாந்த வருமானத்தை இழக்க வேண்டி ஏற்பட்டதாகவும் சில பெற்றோர் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக பெற்றோர் பலர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னர் வழங்கப்பட்ட சீருடைத்துணி வழங்கும் முறையே பெற்றோருக்கு இலகுவானது. அன்றாடம் தொழில் செய்து சம்பாதிக்கும் பெற்றோர் அதன் மூலமாக பாதிக்கப்படுகின்றனர். காரணம் தொழிலுக்குச் செல்லாமல் பண வவுச்சர்களைப் பெற பாடசாலைக்கு வரவேண்டியுள்ளது. இதற்காக போக்குவரத்துக்கும் பணத்தைச் செலவிட வேண்டியுள்ளது. பண வவுச்சர்களைப் பெற்ற பின்னர் மீண்டும் துணிகளை வாங்க பணத்தைச் செலவிட்டு கடைகளுக்குச் சென்று துணிகளை வாங்க வேண்டும். இதன் காரணமாக துணிகளுக்கு பதிலாக பண வவுச்சர் பெறுவது எமக்கு நட்டமாவே அமைந்துள்ளது.
தொழிலுக்கு சென்றால் எமக்கு கிடைக்கும் நாளாந்த வருமானம் பண வவுச்சரை விட இரண்டு மடங்காகும். அத்துடன் நீர்கொழும்பு நகரில் உள்ள சில பாடசாலைகளில் உயர்தர வகுப்பு மாணவர்கள் சிலருக்கு பண வவுச்சர்கள் வழங்கப்படவில்லை. பாடசாலைகளுக்கு உரிய தினத்தில் போதிய அளவு வவுச்சர்கள் கிடைக்காமையே இதற்கான காரணமாகும் என்று தெரிவிவித்தனர்.
இதேவேளை ஆசிரியர்கள் சிலர் கருத்து தெரிவிக்கையில்,
முன்னரைப் போன்று சீருடைத்துணிகளை நேரடியாக வழங்கும் முறையே இலகுவானது. வருட இறுதியில் விடுமுறை வழங்கும் காலப்பகுதியில் பாடசாலைகளில் ஒளி விழா, பரிசளிப்பு விழா ஆசிரியர் - பெற்றோர் சந்திப்பு என ஆசிரியர்களுக்கு பல்வேறு பணிகள் உள்ளன. இந்த நிலையில் திடீரென பண வவுச்சர்களை வழங்க பணிக்கப்பட்டமை பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தியது என்றனர்.