Breaking News

திருமலை கடற்பரப்பில் சடலங்கள் இருப்பதை கடற்படை மறுப்பு

திருகோணமலை கடற்பரப்பில் 20 பேரது சடலங்கள் மிதப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்ற போதிலும், அவ்வாறான சடலங்கள் எதுவும்
இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்ற மாறுபட்ட கருத்தை வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா கடற்படை.

திருகோணமலை – சம்பூரை அண்மித்த கடற்பரப்பில் இந்த சடலங்கள் மிதப்பதாக குறித்த பகுதி மீனவர்களால் பொலிஸாருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தகவல் அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஸ்ரீலங்கா கடற்படைக்குச் சொந்தமான 4 டோரா வகை படகுகள், விமானப் படைக்குச் சொந்தமான விமானம் ஆகியவற்றின் ஊடாக கடற்பரப்பில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் மீனவர்கள் தெரிவித்ததைப் போன்று அவ்வாறான சடலங்கள் எதுவும் மீட்கப்படவில்லை என்று ஸ்ரீலங்கா கடற்படை அறிவித்துள்ளது.

இருந்த போதிலும் கிடைத்த தகவலை அடுத்து ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக ஸ்ரீலங்கா விமானப் படை தெரிவித்துள்ளது. மூன்று டோரா படகுகளும் திருகோணமலை கடற்பரப்பில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த சடலங்கள் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு அடித்துவரப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என்று மீனவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.