வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இலங்கையில் அனுமதி இல்லை - அமைச்சர் அஜித் பெரேரா
எந்தவொரு வெளிநாட்டு நீதிபதியும் இலங்கையில் வழக்கு விசாரணை செய்ய முடியாது என்று தெரிவித்த
மின்சக்தி அமைச்சர் அஜித் பி.பெரேரா, அவ்வாறு செய்வதானால் அதற்கு முன்னர் நாட்டின் அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கூறினார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
சர்வதேச நீதவான்கள் குழுவின் தலையீடுகள், சர்வதேச நாடுகளின் தண்டனைகள், பொருளாதார தடைகள் போன்ற பல அபாயகரமான சூழ்நிலையிலிருந்து இலங்கையை நாங்கள் காப்பாற்றியிருக்கின்றோம். பொறுப்பு கூறல் என்று வரும்போது அதனை செய்வதாயின் நாட்டின் அரசியல் அமைப்பிற்கு உட்பட்டே மேற்கொள்வோம். எமது நாட்டு சட்டங்களுக்கு அமைய எந்தவொரு வெளிநாட்டு நீதிபதியும் இங்கு வந்து வழக்கு விசாரணை செய்ய முடியாது.
எமது நாட்டு அரசியல் அமைப்பின்படி வெளிநாட்டு நீதிபதிகள் இங்கு வந்து விசாரணை நடத்த முடியாது.
வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இங்கு வந்து விசாரணை செய்ய வேண்டும் என்றால் அதற்கு முதல் நாட்டிலுள்ள அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். எனினும் வெளிநாட்டு நீதிபதிகளினதும், அமைப்புகளினதும் உதவிகளை பெறவிருக்கின்றோம். எமது செயற்பாடுகள் சர்வதேச தரத்திற்கு அமைய முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதால் தான் இந்த உதவிகளை பெறவிருக்கின்றோம் என்றார்.