இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வே சரியான தீர்வாகும்: ஜயம்பதி விக்கிரமரட்ண
நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமானால், மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்று ஜனாதிபதி சட்டத்தரணியும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்தார்.
அத்துடன், 13ஆவது திருத்தச்சட்டத்தினூடாக மாகாண சபைகளுக்கு வலது கையால் வழங்கப்பட்ட அதிகாரங்களை இடது கையால் பறித்தெடுக்கும் நடவடிக்கைகளையே 1988ம் ஆண்டு முதல் ஆட்சியிலிருந்துவரும் அரசுகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மீதான குழுநிலை விவாதம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் இடம்பெற்ற போது அதில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘இனப்பிரச்சினைக்கு மாகாண சபைகள் தீர்வாகமாட்டாது என இங்கு குறிப்பிடப்பட்டது. அப்படியானால் தீர்வு எது? முதலில் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். இதனூடாக அரசியல் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும்.
மாகாண சபை என்பது வடக்கு, கிழக்குக்கு மட்டும் தேவையானதல்ல. மாகாண சபையும் அதிகாரங்களும் ஏனைய மாகாணங்களுக்கும் தேவை. கொழும்பில் தீர்வு எடுப்பது நிறுத்தப்பட்டு அந்த அதிகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவேண்டும்.’ என்றும் கூறினார்.