Breaking News

வட்டமடு தமிழ் மக்களின் மேய்ச்சல் நிலஉரிமையை உறுதிப்படுத்தியது மேன்முறையீட்டு நீதிமன்றம்

அம்பாறை மாவட்டத்தில், திருக்கோவில் வட்டமடுப் பிரதேசத்தில், தமிழ் மக்களின் மேய்ச்சல் காணிகளில், முஸ்லிம்கள் விவசாயத்தில் ஈடுபட்டது சட்டவிரோதசெயல் என்று  மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள வட்டமடு பிரதேசத்தில் 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு, தமிழ் மக்களின் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையாக 1976ம் ஆண்டு  அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.

இங்கு கால்நடைகளை வளர்த்து வந்த விவசாயிகள், போரினால் இடம்பெயர்ந்த நிலையில், போலி நில உரிமைச் சான்றிதழ்களை தயாரித்து, முஸ்லிம்கள் அதனை தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டு விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், கால்நடைவளர்ப்பாளர்கள் அங்கு தமது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்ட போது, முஸ்லிம் விவசாயிகளுடன் முரண்பாடுகள் ஏற்பட்டன. இது தொடர்பாக தமிழ் கால்நடைவளர்ப்பாளர்கள், பொத்துவில் நீதிமன்றத்தில் முறையிட்ட போது, முஸ்லிம் விவசாயிகளுக்கு சார்பாகவே தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து, தமிழ் கால்நடைவளர்ப்பாளர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுச்செய்தனர்.

இந்த வழக்கை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழுவே, கால்நடை அபிவிருத்திப் பணிகளுக்காக தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த நிலங்களில் பலவந்தமான முறையில் முஸ்லிம் மக்கள் நுழைந்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டமை சட்டவிரோதமான செயல் என்று நேற்று முன்தினம் தீர்ப்பளித்துள்ளது.

சம்பந்தப்பட்ட நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதை முற்றாகத் தடை செய்துள்ள நீதிமன்றம் கால்நடை அபிவிருத்திப் பணிகளுக்காக அதனை மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்கும் தீர்மானித்துள்ளது.