யாழ்.மாவட்டத்தில் 993பேரின் சாட்சியங்கள் பதிவு - பரணகம ஆணைக்குழு அறிவிப்பு
யாழ்.மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக ஆறுநாட்கள் நடைபெற்ற காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகளில் 993 பேரின் சாட்சியங்களை பதிவு செய்துள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான காணாமல்போனோர்தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த வெள்ளிக்கிழமை முதல் இரண்டாம் கட்டமாக சாட்சியங்களை பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகளை ஆரம்பித்திருந்தது. முதலிரு நாட்கள் யாழ். மாவட்ட செயலகத்திலும் அடுத்தவிரு நாட்கள் பருத்தித்துறை பிரதேச செயலகத்திலும் நேற்று முன்தினம் சங்கானை பிரதேச செயலகத்திலும் இறுதிநாளான நேற்று தெல்லிப்பழை பிரதேச செயலகத்திலும் அமர்வுகளை நடத்தியிருந்தது.
முதல் நாள் அமர்வில் 235 பேர் அழைக்கப்பட்டிருந்ததோடு 130பேரிடம் விசாரணைசெய்யப்பட்டிருந்தது. 44 புதிய முறைப் பாடுகள் கிடைத்திருந்ததோடு 35முறைப்பாட்டாளர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இரண்டாம் நாள் அமர்வில் 266 பேர் அழைக்கப்பட்டு 148 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்ட தோடு கிடைக்கப்பெற்ற 53புதிய முறைப்பாடுகளில் 28 முறைப்பாட்டாளர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
கடந்த ஆறு அமர்வுகள் தொடர்பாக ஆணைக்குழுவின் தலைவர் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்தொடர்ந்தும் தெரிவிக்கையில், “மூன்றாம் நாள் அமர்வில் 290 பேர் அழைக்கப்பட்டு 168 பேரிடம் விசாரணைகள் செய்யப்பட்டிருந்ததோடு கிடைக்கப்பெற்ற 57 புதிய முறைப்பாட்டாளர்களில் இருவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தன. நான்காம்நாள் அமர்வில் 271 பேர் அழைக்கப்பட்டு 158 பேரிடம் விசாரணைகள் மேற்கொள் ளப்பட்டிருந்தன.
61 புதிய முறைப்பாடுகள் கிடைகப்பெற்ற நிலையில் ஒருவரிடமே விசாரணை நடத்தப்பட்டிருந்தது ஐந்தாம் நாள் அமர்வில் 303 பேர் அழைக்கப்பட்டு 173பேரிடம் சாட்சியங்கள் பெறப்பட்டதோடு 51புதிய முறைப்பாடுகளில் இரண்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இறுதி நாளான நேற்றைய தினம் 255 பேர் அழைக்கப்பட்டு 148 பேரிடம் விசாரணைசெய்யப்பட்டதோடு 71புதிய முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டன.
இதனடிப்படையில் இரண்டாம் கட்ட மாக முன்னெடுக்கப்பட்ட ஆறு அமர்வுகளில் மொத்தமாக 1620பேர் அழைக்கப் பட்டதோடு 337புதிய முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் 993 முறைப்பாட்டாளர்களது சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்றார்.