வடக்கு கிழக்கில் வீடுகளை எமது இராணுவம் அழிக்கவில்லை - சபையில் சஜித் பிரேமதாஸ
வடக்கு – கிழக்கில் வீடுகளை எமது இராணுவம் அழிக்கவில்லை. விடுதலைப்புலிகளே வீடுகள் அழிப்பிற்கு முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நேற்று சபையில் குற்றம் சாட்டிய அமைச்சர் சஜித் பிரேமதாஸ. ஏழு இலட்சத்திற்கு மேல் உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களிற்காக அடுத்த ஆண்டு விசேட வீடமைப்பு திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வரவு–செலவுத்திட்டத்தின் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார். சபையில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், வீடுகளை வழங்கும் போது இன, மத பேதங்கள், அரசியல் பாகுபாடுகள் பார்க்கப்பட மாட்டாது. தேவையானவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. வியாழேந்திரன் படையினரால் தான் வடக்கு கிழக்கில் வீடுகள் அழிக்கப்பட்டன என குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டை நான் நிராகரிக்கின்றேன். ஏற்றுக் கொள்ளமாட்டேன். வடக்கு – கிழக்கில் வீடுகளை எமது இராணுவத்தினர் அழிக்கவில்லை. அங்கு யுத்தம் ஒன்று இடம்பெற்றது. யுத்தத்தால் தான் வீடுகள் அழிந்துள்ளன. எனவே வீடுகள் அழிக்கப்பட்டதற்கான முழுப்பொறுப்பை விடுதலைப்புலிகளே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வீடுகள் அழிப்புக்கு விடுதலைப் புலிகளே காரணம். இன்று யுத்தமும் இல்லை. விடுதலைப் புலிகளும் இல்லை. எனவே மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். யுத்தம் காரணமாகத் தான் படையினர் வடக்கிற்கு சென்றனர். அவர்கள் பலாத்காரமாக காணிகளை பெறவில்லை.
தற்போது யுத்தம் முடிவுற்ற சூழ்நிலையில் ஜனாதிபதியும் பிரதமரும் மக்களுக்கு காணிகளை மீள வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இதன் போது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டு காணிகளை மக்களுக்கு வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
நாட்டில் 7 இலட்சத்திற்கு மேற்பட்ட பெண்கள் தலைமைத்துவம் வகிக்கும் குடும்பங்கள் உள்ளன. இக்குடும்பங்களுக்காக அடுத்த வருடம் விசேட வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அத்தோடு வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்கு விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.அதேவேளை ஊடகவியலாளர்களுக்கு, கலைஞர்களுக்கு, குறைந்த வருமானம் பெறுவோருக்கு, அரச ஊழியர்களுக்கு என விசேட வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் போது நேரடியாக அந்தந்த துறைகளுக்கு பொறுப்பான அமைச்சுடன் இணைந்து செயல்படுவோம். எமது 50000 வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கிழ் 35000 வீடுகள் அமைக்கப்பட்டுவிட்டன. எஞ்சிய 15000 வீடுகள் அடுத்த வருடத்தில் அமைத்து முடிக்கப்படும்.
அத்தோடு இந்த டிசம்பர் 31க்குள் 38 மாதிரிக் கிராமங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு வீட்டுரிமையும் வழங்கப்படும். நாட்டில் 30 இலட்சத்திற்கு மேல் மக்கள் காணி உரிமை இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு காணி உரிமைகள் வழங்கப்படவுள்ளதோடு 10 வருடங்களுக்கு மேலாக வாடகைக்கு வாழும் மக்களுக்கு வீட்டுரிமை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.