மஹிந்த உயிருக்கு ஆபத்து - மஹிந்தவின் ஊடகப்பிரிவு தெரிவிப்பு
அரசாங்கம் ஆபத்தான விடுதலைப்புலிகளை விடுதலை செய்து வருவதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவரின் ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் ஊடகப்பரிவு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முன்னாள் ஜனாதிபதிக்கு பாதுகாப்பளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 500 இராணுவத்தினரை அரசாங்கம் விலகிக்கொண்டுள்ளதாக இன்று ஊடகங்களில் பரவலாக செய்தி வெளியாகியுள்ளது.
இது சரியான தகவல் அல்ல முன்னாள் ஜனாதிபதிக்கு 120 இராணுவத்தினர் மாத்திரம் பாதுகாப்பினை வழங்கிவருகின்றனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஆபத்தான விடுதலைப்புலி உறுப்பினர்களை அரசாங்கம் விடுதலை செய்துவருகின்றது.
11,000 விடுதலைப்புலிகளிற்கு புனர்வாழ்வினை வழங்கி அவர்களை விடுதலைசெய்த அரசாங்கம் சுமார் 200 அல்லது 300 ஆபத்தான விடுதலைப்புலிகளை அவர்களிற்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில் தடுத்துவைத்திருந்தது.
இவர்களை தற்போது அரசாங்கம் விடுதலைசெய்து வருகின்றது. இது முன்னாள் ஜனாதிபதியின் உயிரிற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை வலியுறுத்தவேண்டும்.
இதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதிக்கான பாதுகாப்பை வழங்குவதற்காக அவர்களிற்கு பாதுகாப்பு வழங்கும் படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
ஆபத்தான விடுதலைப்புலிகள் விடுதலைசெய்யப்படும் இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதியினது பாதுகாப்பை மாத்திரமல்ல, யுத்தத்திற்கு தலைமை தாங்கிய அனைவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒரு காலத்தில் புலிகளின் முக்கிய தளபதியாக இருந்த கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மஹிந்த அரசாங்கத்தின் நம்பிக்கைக்குரிய செல்லப்பிள்ளையாக இருந்தார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.