வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வடமாகாண சபையினால் நிதியம் உருவாக்கம்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ள தமிழக மக்களுக்கு உதவும் நோக்குடன் வடமாகாண சபையினால் நிதியம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவுவது தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர்கள் இடையிலான கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.
வடமாகாண சபை பேரவைக்கட்டடத்தில் நடைபெற்ற அக்கலந்துரையாடலிலையே நிதியம் ஆரம்பிப்பதாக முடிவெடுக்கப்பட்டுஉள்ளது.
அக் கலந்துரையாடல் தொடர்பில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கருத்து தெரிவிக்கையில், வெள்ள பாதிப்பினால் உயிர்களை இழந்து சொத்துக்களை இழந்துள்ள தமிழக மக்களுக்கு வடமாகாண சபை சார்பிலும் வடமாகாண மக்கள் சார்பிலும் அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம். அவர்களின் உணர்வுகளோடும் பங்கு கொள்கின்றோம்.
பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு உதவும் முகமாக நிதியம் ஒன்றினை உருவாக்கி மாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர்கள், வங்கி துறையினர், வர்த்தக துறையினர், தனியார் துறையினர், கூட்டுறவு துறையினர் என பல்வேறு துறை சார்ந்தவர்களின் பங்களிப்பினை பெற்று எதிர்வரும் 21ம் திகதி யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் கையளிக்க உள்ளோம்.
நிதியத்திற்கான வங்கி கணக்கினை நாளைய தினம் (திங்கள் கிழமை) ஆரம்பிக்க உள்ளோம். அந்த கணக்கு இலக்கத்திற்கு நேரடியாகவோ பேரவை ஊடாகவோ பங்களிப்பினை எதிர்வரும் 20ம் திகதி வரை வழங்கலாம்.
கணக்கு இலக்கத்தினை ஊடகங்கள் வாயிலாக அறிவிப்போம், புலம்பெயர் உறவுகளும் தங்களால் ஆன வகையில் உதவ வேண்டும் என அவர்களிடமும் அன்பான வேண்டுகோளை விடுவிக்கின்றோம் என தெரிவித்தார்.
இதேவேளை இன்றைய தினம் நடைபெற்ற இக்கலந்துரையாடலுக்கு 38 மாகாண சபை உறுப்பினர்களில் 15 பேரே கலந்து கொண்டனர். அத்துடன் முதலமைச்சர், அமைச்சர்கள் எவரும் கலந்து கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.