பரணகம ஆணைக்குழுவை பகிஷ்கரிக்க தீர்மானம்!
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல்போகச் செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு இதுவரை சாதித்தது என்ன? ஒன்றுமே இல்லை. எனவே, நாம் ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வுகளை புறக்கணிப் போம் என வடக்கு,கிழக்கு மாகாணங்களின் 8 மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல்போனவர்களின் உறவுகளுடைய சங்கங்கள் தீர்மானம் எடுத்துள்ளன.
நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற காணாமல்போனவர்களுடைய உறவுகளின் கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் வடக்குகிழக்கு மாகாணங்களின் 8 மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல்போனவர்களுடைய உறவினர்கள் சங்கத்தின் தலைவர்கள் மற்றும் காணாமல்போனவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டதாவது;
கடந்த 2013ஆம் ஆண்டு காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.
குறித்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டு 3 வருடங்களாகும் நிலையில் ஆணைக்குழுவினால் எவ்விதமான நன்மைகளும் ஏற்படவில்லை மேலும் இவ்வாண்டு ஒரு ஆட்சிமாற்றம் ஏற்பட்டதுடன் அது நல்லாட்சி என கூறப்பட்டபோதும் நன்மைகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நாம் எங்கள் உறவுகளுக்காக போராட்டங்களை நடத்தி வருகின்றோம்.இதற்கும் மேலதிகமாக காணாமல்போனவர்களின் விடயத்தில் விசேடமாக நியமிக்கப்பட்ட குழுவினாலும், ஐ.நா மனிதவுரி ஆணையகத்தினாலும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டபோதும் அரசாங்கம் அவற்றுக்கு மதிப்பளிக்கவில்லை.
இந்த நிலையில் மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வுகள் இம்மாதம் 11ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரையில் யாழ்.மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.எனவே அர்த்தமற்ற இந்த ஆணைக்குழுவையும், அரசாங்கத்தையும் நம்பியிருப்பதில் பயனில்லை.எனவே நாம் ஒரு சர்வதேச விசாரணை பொறிமுறையினையே வலியுறுத்தி நிற்கவேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் காணாமல்போனவர்களின் உறவுகள் இந்த ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வுகளை புறக்கணித்தமை போன்று யாழ்ப்பாணத்திலும்,
வடக்கு கிழக்கு மாகாணங்களின் 8 மாவட்டங்களிலும் இந்த புறக்கணிப்பை அல்லது பகிஷ்கரிப்பை மேற்கொள்ளவேண்டும் என தீர்மானம் எடுத்துள்ளோம். காணாமல்போனவர்களின் உறவுகள் தொடர்ந்தும் தாம் ஏமாளிகளாக இருக்க முடியாது. இருக்கப்போவதுமில்லை