மத்தியில் இருக்கும் அதிகாரங்கள் மாகாணங்களுக்கு பகிரப்படவேண்டும்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் முன்மொழியப்பட்டுள்ள வர்த்தமானியை ஏற்க முடியாது. இது மிகவும் பக்கச்சார்பான முறையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்திடம் காணப்படும் அதிகாரங்கள் மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பகிர்ந்தளிக்கப்ட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் நீண்ட கால அவகாசம் பெற்று நிறைவேற்றப்பட வேண்டும். அவசரமாக தேர்தலை நடத்த முடியாது. அனைத்து கட்சிகளினதும் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டே திருத்தம் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பத்தரமுல்லை, தலவத்துகொட கிரேன் மொனாசி நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டபோது கேசரிக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முன்னைய ஆட்சியின் போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமையை மாற்றும் வகையில் விசேட சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை அடிப்படையாக கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. எல்லை நிர்ணயம் நீதியான முறையிலும் பக்கசார்பின்றியும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
புதிய தேர்தல் முறைமை நிச்சயமாக அவசியமாகும். ஆகவே இதற்கான எல்லை நிர்ணயம் விடயத்தில் அனைத்து கட்சிகளினதும் யோசனை ஏற்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் நேர்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும். உள்ளூராட்சி மன்ற தேர்தல் அவசரமாக வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. எல்லை நிர்ணயம் விடயத்தில் அமைதியான முறையில் ஒழுங்கான தீர்மானத்தை எடுத்த பின்னர் தேர்தலுக்கு செல்ல வேண்டும்.
அத்துடன் தற்போது ஆட்சி அதிகாரங்கள் முழுமையாக மத்திய அரசாங்கத்திடமே காண்ப்படுகின்றது. ஆகையால் மத்திய அரசாங்த்தில் தக்கவைக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கும் உள்ளராட்சி மன்றங்களுக்கும் பகிந்தளிக்கப்பட வேண்டும். எல்ல்ை நிர்ணயத்த்தின் போது தமிழ், முஸ்லிம்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ரவுப் ஹக்கீம்
இதன்போது அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கருத்து தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமையின் வர்த்தமானி அறிக்கையில் பல்வேறு குளறுபடிகள் காணப்படுகின்றன. முன்னைய ஆட்சியின் போது தனிக்கட்சிக்கு சார்பான முறையிலேயே எல்லை நிர்ணயங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. ஆகவே இது பக்கசார்பின்றி முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு அரசியல் கட்சிகள் பூரண ஒத்துழைப்பினை வழங்கும் என்றார்.
அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிடுகையில்
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சிறுப்பான்மை மக்களுக்கு அநீதி ஏற்படும் வகையில் காணப்பட்டால் உள்ளூராட்சி தேர்தலை தமிழ் முற்போக்கு கூட்டணி பகிஷகரிக்கும். ஆகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போன்று மைத்திரிபால சிறிசேன செயற்பட மாட்டார். நாட்டின் சிறுப்பான்மை இனத்தவர்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதற்கு உரிய தீர்வினை வழங்க வேண்டும் என்றார்.
விஜித்த ஹேரத் எம்.பி. கருத்து வெளியிடுகையில்
எல்லை நிர்ணயம் விடயத்தில் அனைத்து கட்சிகளினதும் யோசனை ஏற்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் நேர்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும். உள்ளூராட்சி மன்ற தேர்தல் அவசரமாக வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. எல்லை நிர்ணயம் விடயத்தில் அமைதியான முறையில் ஒழுங்கான தீர்மானத்தை எடுத்த பின்னர் தேர்தலுக்கு செல்ல வேண்டும். அரசாங்கம் அனைத்தும் குழப்பிக்கொண்டுள்ளது என்றார்.