Breaking News

திடீரென சீனா சென்ற கோத்தா – மகிந்தவும் செல்லத் திட்டம்

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சீனாவுக்குத் திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு திரும்பியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில வாரங்களுக்கு முன்னர், கோத்தாபய ராஜபக்சவும், அவரது மனைவி அயோமா ராஜபக்சவும், திடீரெனச் சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தனர். அதேவேளை, மகிந்த ராஜபக்சவும், விரைவில் சீனா செல்வதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவுக்குச் சென்று திரும்பியதும், மகிந்த ராஜபக்ச தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்றும் தெரிய வந்துள்ளது. கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மிக நெருக்கமான உறவுகள் காணப்பட்டன.

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரும், ராஜபக்ச குடும்பத்தினருக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் இன்னமும் நெருக்கமாகவே உள்ளன. இந்த நிலையிலேயே கோத்தாபய ராஜபக்ச சீனா சென்று திரும்பியுள்ளார். எனினும், அவரது சீனப் பயணத்துக்கான காரணம் தெரியவரவில்லை.

இதற்கிடையே, சர்ச்சையில் சிக்கியுள்ள அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதியும் சீனாவுக்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.