பயங்கரவாத அச்சுறுத்தல் : விமான நிலையத்தின் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானம்
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உலக நாடுகளில் அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து இலங்கை அரசாங்கம் இத்தீர்மனத்தை எடுத்துள்ளதாக, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் நிமலசிறி தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம் என்பது ஒரு நாட்டுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல என்பதால் விமானநிலையத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், உலக நாடுகள் தங்கள் விமானநிலையங்களில் பயன்படுத்தும் நடைமுறைகள் குறித்து தற்போது ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டார்.
மேலும், சர்வதேச அளவில் விமான நிலையங்களில் பயணிகளின் உடல்களை சோதனை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சாதனங்களை பயன்படுத்துமாறு பணிப்புரை வழங்கப்பட்டால், அதனை நடைமுறைப்படுத்த தயாரெனவும் குறிப்பிட்டார்.
இதன் முற்கட்டமாக, ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை ஆகியவற்றிற்கு, பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகளை எடுக்குமாறும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அறிவிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.