Breaking News

விடுதலை கோரி நளினி மனு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி அவரது கணவர் முருகன் மற்றும் சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ஆகியோருக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது.

பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அவர்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நளினி ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் பெண்கள் சிறையில் உள்ளார்.

அவர்களை விடுதலை செய்வது குறித்த அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை மத்திய அரசுக்குத்தான் உள்ளது என்று இந்திய உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு கூறியது. இதனால் விடுதலையை எதிர்பார்த்திருந்த அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் நேற்று அவரது வக்கீல்கள் ராதா கிருஷ்ணன், புகழேந்தி, ஆகியோர் வேலூர் சிறையில் நளினியை சந்தித்து பேசினர். பின்னர் அவர்கள் கூறியதாவது:–

20 ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் தண்டனை அனுபவித்தவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள். இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.அரசியலமைப்பு சட்டம் 161–ன்படி விடுதலையை தடுக்க முடியாது என கூறப்பட்டுள்ளது.இதன்படி நளினியை விடுதலை செய்ய தமிழக அரசு மற்றும் கவர்னருக்கு அதிகாரம் உள்ளது.

குற்றவியல் நடைமுறை சட்டம் 432–ன் கீழ் தமிழக அரசு முயற்சி செய்தால் கவர்னர் மூலமாக நளினியை விடுதலை செய்ய முடியும். அதன் அடிப்படையில் தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி ஐகோர்ட்டில் புதிய ரிட்மனு தாக்கல் செய்ய உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.