வடக்கு கிழக்கில் மேலும் பல வதை முகாம்கள் இருக்கலாம் : சுரேஸ்
யாழ்.வரணியிலும், திருகோணமலையிலும் மாத்திரமன்றி வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் சித்திரவதை முகாம்கள் இருக்கலாமென்றும், அதுகுறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் மற்றும் மன்றும் இலங்கை அரசாங்கம் முழுமையான விசாரணை நடத்தவேண்டுமெனவும் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வரணி பகுதியில் இராணுவத்தின் 52ஆவது படையணி நிலைகொண்டிருந்த போது பலர் கைதுசெய்யப்பட்டு காணாமல் போன, கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிவித்த அவர், அங்கு பல நூற்றுக்கணக்கானவர்கள் சித்திரவதைக்கு உட்பட்டமைக்கான ஆதாரங்களாக சுவறுகளில் இரத்த கறை படிந்து, கூரைகள் முள் வேலிகளால் அமைக்கப்பட்டு, கைவிரல் அடையாளங்கள் காணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மக்களது காணிகளையும் வீடுகளையும் ஆக்கிரமித்து வரணியில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர், கடந்த 2014ஆம் ஆண்டு மே மாத நடுப்பகுதியில் அழுத்தங்கள் காரணமாக வெளியேறி கொடிகாமத்திற்கு சென்றதாகவும், அதன் பின்னர் தாம் வரணிக்குச் சென்று இவற்றை பார்வையிட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அவற்றை வெளியிடக்கூடிய சூழல் அப்போது காணப்படாமையால், தற்போது வெளியிட்டதாக தெரிவித்த அவர், இதுகுறித்து மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசாங்கம் இணைந்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.