Breaking News

மகேஸ்வரன் படுகொலை விவகாரம் - தப்பித்துக்கொள்ள முயற்சிக்கும் டக்ளஸ்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரி.மகேஸ்வரனை படுகொலை செய்த சூத்திரதாரி யார் என்பதை அறிந்துகொள்ள வேண்டுமாயின் அவரது சகோதரர்களையே விசாரணை செய்ய வேண்டும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இப்படுகொலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க விசாரணை ஆணைக்குழு ஒன்றும் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற சிறுவர், மகளிர் விவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தார்.

இதற்கு முன்னர் கடந்தவாரம் சபையில் உரையாற்றியிருந்த பிரதியமைச்சரும், படுகொலை செய்யப்பட்ட முன்னாள் எம்.பி மகேஸ்வரனின் பாரியாருமான விஜயகலா மகேஸ்வரன், தனது கணவரின் படுகொலை சூத்திரதாரி இந்த சபையிலேயே உள்ளார் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இதற்கு பதில் வழங்கும் நோக்கில் நாடாளுமன்றில் உரையாற்றிய டக்ளஸ் தேவானந்தா எம்.பி மேலும் கூறியதாவது,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரி.மகேஸ்வரன் படுகொலை சூத்திரதாரி யார் என்பதை அறிந்துகொள்வதற்கு அவரது 5 சகோதரர்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பதோடு, இது தொடர்பிலான முழுமையான விசாரணைகளை நடத்தும் பொருட்டு விசாரணைக்குழு ஒன்றையும் அமைக்க வேண்டும்.

தேசிய தலைவர் அமிர்தலிங்கத்தை படுகொலை செய்த கொலையாளி கையும்மெய்யுமாக அகப்பட்டார். இதுபோன்ற பல குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டார்கள். அந்த வகையில் மகேஸ்வரனின் கொலையாளியும் கைதுசெய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் சந்தேகம் இருந்திருந்தால் நீதிமன்றத்தை நாடியிருக்கலாம். அதைவிடுத்து சிலர் அரசியல் நோக்கத்திற்காக என் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி சபையில் ஊளையிட ஆரம்பித்திருக்கின்றனர்.

மகேஸ்வரனை கொலை செய்த கொலையாளியுடன் இச்சபையில் இருந்த உறுப்பினர் ஒருவர்தான் இறுதியாக தொலைபேசி ஊடாக பேசியுள்ளதாக பேசப்படுகின்றது. இது தொடர்பில் உண்மையை அறிந்துகொள்ள விசாரணை நடத்தப்பட குழு ஒன்று அமைக்க வேண்டும் என்றார்.