தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க அரசியல் தீர்வை அரசு முன்வைக்க வேண்டும் - ஐரோப்பிய யூனியன்
தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் அரசியல் தீர்வொன்று அரசாங்கத்தால் முன்வைக்கப்பட வேண்டும். 13ஆம் திருத்த சட்டத்துக்கு அமைவாக அதிகாரப்பகிர்வுகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஐரோப்பிய யூனியன் அக்கறை கொண்டுள்ளது.
இவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் சகல நாட்டுத் தூதுவர்களுக்குமான தலைவர் டேவிற் டாலி தெரித்துள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டை முதலமைச்சர் காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடிய பின் டேவிற் டாலியும் முதலமைச்சரும் இணைந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கிழக்கு மாகாண சபையின் அதிகார பங்களிப்பு பற்றியும் அரசியல் தீர்வுபற்றியும் நான் முதலமைச்சருடன் கலந்துரையாடியுள்ளேன். முதலமைச்சர் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விரைவு படுத்த வேண்டும் என்பதையும் 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைவாக அதிகாரம் பூரணமாக பகிர்ந்தளிப்பது தொடர்பில் ஐரோப்பிய யூனியன் கூடிய அக்கறை செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த இரு விடயத்திலும் ஐரோப்பிய யூனியன் அதிக அக்கறை கொண்டுள்ளதுடன் அரசாங்கத்துக்கு ஆலோசனையும் நல்கி வருகின்றது. கிழக்கு மாகாணத்தின் ஒட்டுமொத்தமான இன்றைய நிலைமைகள் பற்றி முதலமைச்சர் மூலம் கேட்டுத் தெரிந்துக்கொண்டுள்ளேன் என்றார்.