எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் - மகிந்த அணிக்கு வழங்க அரசு மறுப்பு
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அணிக்கு வழங்க முடியாது என அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிப்பார் எனவும் ஜனாதிபதி கூறியதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த முன்னாள் அமைச்சர்களான தினேஸ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்திருப்பதாகவும் சுட்டிக் காட்டினர்.
அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் கட்சி ஒன்று எதிர்க்கட்சியாக பதவி வகிக்க முடியாது என்றும் ஆகவே அந்த பதவி தமக்கு வழங்கப்பட வேண்டும் என்று கேட்டதாகவும் ஆனால் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன மறுத்துவிட்டார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு வழங்குமாறு வலியுறுத்தி நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 50 பேர் கையொப்பமிட்ட கடிதம் ஒன்றை முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.