இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை
பாகிஸ்தானிடம் இருந்து போர் விமானங்களை வாங்க இலங்கை முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், அதனைக் கைவிடுமாறு புதுடெல்லியிடம் இருந்து கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக கொழும்பு ஆங்கில இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜே.எவ்-17 போர் விமானங்களை பாகிஸ்தானிடம் இருந்து இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்வதற்கான உடன்பாட்டை செய்து கொள்வதற்கு இந்தியத் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக, உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் கூறியுள்ளன.
முன்னாள் விமானப்படைத் தளபதி எயர்சீவ் மார்ஷல் ஜெயலத் வீரக்கொடி பாகிஸ்தானுக்கான தூதுவராக இருந்த போது, இந்த விமானக் கொள்வனவுக்கான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டன. இலகு ரக, ஒற்றை இயந்திர பலநோக்குப் போர் விமானமான, ஜே.எவ்-17, பாகிஸ்தான் மற்றும் சீன கூட்டுத் தயாரிப்பாகும்.
இந்த போர் விமானத்தை கண்காணிப்பு, தரைத்தாக்குதல், வான்இடைமறிப்பு போன்ற தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும். இந்தப் போர் விமானங்களை பாகிஸ்தானிடம் இருந்து இலங்கை வாங்க முனைவது குறித்து, இலங்கை ஜனாதிபதி மைத்திரி்பால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தனிப்பட்ட முறையில் இந்தியாவின் கரிசனையை வெளியிட்டுள்ளார்.
இந்தக் கொள்வனவு முயற்சி இந்தியாவுக்கு எதிரானது என்று, இலங்கை ஜனாதிபதி மற்றும், பிரதமருக்கு தொலைபேசி மூலம், அஜித் டோவல் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயம் தொடர்பாக பாகிஸ்தானுடன் இணக்கப்பாடு காணப்பட்டால், இலங்கை மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஜே.எவ் 17 அல்லது அதுபோன்ற 10 விமானங்களை இலங்கை பாதுகாப்பு அமைச்சு பாகிஸ்தானிடம் கேட்டிருந்தது. இந்த நிலையில், இதனை முறியடிக்கும் வகையில் இந்தியா புதியதொரு யோசனையை முன்வைத்துள்ளது.
இலங்கை அரசாங்கம் போர் விமானங்களை வாங்குவதற்கான கடனை இந்தியா வழங்கும் என்றும் ஆனால், பாகிஸ்தான் தவிர்ந்த வேறு எந்த நாட்டிடம் இருந்தும் விமானங்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தம்மிடம் போர் விமானங்களை வாங்கினால், இலங்கை விமானப்படையிடம் உள்ள பத்து எவ்-7 போர் விமானங்களைப் புதுப்பித்துத் தருவதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
இந்த விமானக் கொள்வனவு உடன்பாட்டை, வரும் ஜனவரி மாதம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இலங்கை வரும் போது, அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இந்தநிலையில், இந்த விமானக் கொள்வனவு குறித்த இலங்கையின் முடிவு, இந்திய- பாகிஸ்தான் உறவுகளை கொதிநிலைக்கு கொண்டு செல்லும் என்றும் கொழும்பு ஆங்கில இதழ் தெரிவித்துள்ளது.