Breaking News

டக்ளசை வாட்டி எடுத்தார் விஜயகலா (காணொளி இணைப்பு)

எனது கணவனின் படுகொலையுடன் தொடர்புடைய சூத்திரதாரி இந்தச் சபையில் இருப்பதாக நான் கூறிய போதிலும், அவரின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால், இன்று எனது கணவனின் பெயரைக் குறிப்பிட்டு அந்தச் சூத்திரதாரி தன்னைத்தானே இனங்காட்டிக் கொண்டார். இவ்வாறு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே விஜயகலா மகேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு முன்னதாக உரையாற்றிய ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் தொடர்பில் சில கருத்துக்களைத் தெரிவித்ததுடன், அவரின் கொலை தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பில் நம்பிக்கை இல்லை எனில், மேல் நீதிமன்றத்தை நாடமுடியும் எனக் கூறிய நிலையிலேயே, சூத்திரதாரி தன்னை இனங்காட்டிக் கொண்டதாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

நேற்று (நேற்று முன்தினம்) இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில் எனது கணவன் படுகொலை தொடர்பாக நான் குறிப்பிட்டிருந்தேன். எனது கணவரின் பெயரைக் கூறும் உரிமை எனக்குள்ளது. ஆனால், எனது கணவனைக் கொன்றவர் யார் என்று நான் குறிப்பிடவில்லை. சூத்திரதாரி இந்தச் சபையில் இருக்கின்றார் என்றே குறிப்பிட்டிருந்தேன். இங்கு 225 பேர் இருக்கின்றனர். அவர்களில் யார் சூத்திரதாரி என்று நான் குறிப்பிடவில்லை. இந்நிலையில் அந்தச் சூத்திரதாரி தன்னைத்தானே இனங்காட்டிக் கொண்டார்.

எனது கணவன் படுகொலை தொடர்பாக கடந்த காலத்தில் சரியான முறையில் விசாரணை நடைபெறவில்லை. அதனால் மீண்டும் விசாரணை இடம்பெறவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் கோரினேன். நீதிதான் தீர்ப்பு வழங்க வேண்டும்.

நான் குற்றம் செய்யாவிட்டால் பயப்படத் தேவையில்லை. இந்தச் சூத்திரதாரி தன்னைத்தானே இனங்காட்டிக் கொண்டார். இவரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என்றார்.