தமிழர்களை இனவாதிகளாக ஒருபோதும் பார்க்க வேண்டாம் - லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் கோரிக்கை
மஹிந்த அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் நோக்கப்பட்டது போன்று புதிய நல்லாட்சி அரசாங்கம் அவர்களை பார்க்கவில்லை. எனவே, தமிழ் மக்களையும் தமிழ் அமைப்புகளையும் இனவாத கண்கொண்டு பார்க்க வேண்டாம் என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்தார்.
சர்வதேச பொலிஸார் மற்றும் புலனாய்வுப்பிரிவின் அறிக்கைகள் பெறப்பட்டதன் அடிப்படையிலேயே புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் மீதான தடை நீக்கம் இடம்பெற்றது. இவ்விடயத்தில் எமது அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்பட்டிருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அமர்வின் போது இடம்பெற்ற
\வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த ஆதரவு அணியின் டலஸ் அழகப்பெரும எம்.பி.யினால் கேட்கப்படட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு தொடர்ந்தும் விளக்கமளிக்கையில்; புலம்பெயர் தமிழ் அமைப்புக்களையும் புலம்பெயர் தமிழர்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் நோக்கிய விதம் வேறாகவும் ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்த நல்லாட்சி அரசாங்கம் பார்க்கின்ற விதம் வேறாகவும் இருக்கின்றன.
தமிழர்களையும் தமிழ் அமைப்புக்களையும் இனவாதக் கண்கொண்டு பார்க்கவேண்டாம். நாம் அவ்வாறு பார்ப்பது கிடையாது. இன்டர்போல் எனப்படுகின்ற சர்வதேச பொலிஸாரினதும் புலனாய்வுப் பிரிவினரினதும் உதவி ஒத்துழைப்புக்களை நாடி அவர்களது அறிக்கைகளின் பிரகாரமே நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அத்துடன் 8 புலம் பெயர் அமைப்புகள் மீதான தடைகளையும் நீக்கினோம்.
இவ்விடயத்தில் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு ஆறுமாதங்களுக்கு முன்பதாக வடக்கிற்கு எந்த தமிழரும் செல்லமுடியாதவாறு முன்னய அரசாங்கம் தடை விதித்தது. வெளிநாடுகளில் இருந்து வரும் உறவுகள் வடக்கிற்குச் செல்ல முடியாது தடை செய்யப்பட்டனர். தேர்தலை இலக்குவைத்து அன்று சூழ்ச்சிகரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எனினும் எமது அரசாங்கம் அதனைத் தகர்த்தெறிந்தது என்றார்.
இதேவேளை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன உரையாற்றுகையிலேயே புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் மீதான தடைநீக்கம் மற்றும் நபர்கள் மீதான தடை நீக்கம் தொடர்பில் நாம் உயர் மட்டக் குழுவொன்றை அமைத்து அதன் பிரகாரமே நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.
வெளிவிவகார அமைச்சரை தலைமையாகக் கொண்ட இக்குழுவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், படைப்பிரிவுகளின் பிரதானிகள் என முக்கியஸ்தர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.
மேலும் மேற்படி அமைப்புக்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக எந்தவொரு பயங்கரவாத அமைப்புடனும் தொடர்புகளைப் பேணியிருக்கவில்லை. நிதிகளை வழங்கியிருக்கவில்லை என்ற தகவல்களின் அடிப்படையிலேயே நாம் 8 புலம்பெயர் அமைப்புக்களின் தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தோம் என்றார்.