சென்னை வெள்ளத்துக்கு பலியானோரின் சடலங்கள் திருகோணமலைக் கடலில் மிதக்கின்றன?
திருகோணமலைக் கடலில் சடலங்கள் மிதப்பதாக மீனவர்கள் வழங்கிய தகவலை அடுத்து, இலங்கை கடற்படையும், பொலிசாரும் இணைந்து நேற்றிரவு முதல் தேடுதல்களை நடத்தி வருகின்றன.
திருகோணமலையில் இருந்து, 20 கடல் மைல் தொலைவில், ஆறு சடங்கள் மிதப்பதைக் கண்டதாக, அப்பகுதியில் மீன்பிடித்த மீனவர்கள், கடற்படையினருக்கு நேற்று தகவல் அளித்திருந்தனர்.
இதையடுத்து, இலங்கை கடற்படையின் இரண்டு அதிவேக தாக்குதல் படகுகள் அந்த இடத்துக்கு அனுப்பி தேடுதல்கள் நடத்தப்படுகின்றன. இந்தக் கடற்படைப் படகுகளில் இலங்கை பொலிசாரும் , அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதி சக்திவாய்ந்த தேடொளிக் கருவிகளைப் பயன்படுத்தி இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, படகு ஒன்றிலேயே ஆறு சடலங்களைக் கண்டதாக மீனவர்கள் தெரிவித்ததாகவும் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, திருகோணமலை நிலாவெளி கடற்கரையில் நேற்றுக்காலை அடையாளம் தெரியாத சடலம் ஒன்று சிதைந்த நிலையில் கரையாதுங்கியது.
இந்தச் சடத்துடன் காணப்பட்ட வாடகை வாகன சாரதி சங்கத்தின் அடையாள அட்டையில், பூமி துரை, என்.ஜி.ஓ காலனி, காமராஜ் நகர், சூளைமேடு, சென்னை-94 என்ற முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர், சென்னை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. திருகோணமலைக் கடலில் மிதக்கும் சடலங்கள் சென்னை வெள்ளத்துக்குப் பலியானவர்களுடையவையாக இருக்கலாம் என்றும் கருதப்படும்.