ஆயுதக் கொள்வனவு ஆவணம் ஜனாதிபதி செயலகத்திலிருந்து மாயம் - சபையில் பிரதமர் தெரிவிப்பு
ஜனாதிபதி செயலகத்திலிருந்து காணாமல் போயுள்ள பெறுமதி மிக்க ஆயுதக் கொள்வனவுகள் தொடர்பான அறிக்கையை கண்டுபிடிக்கு மாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வாய்மொழிமூல விடைக்காக வாசுதேவ நாணயக்கார எம்பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
உயர்நீதிமன்ற நீதிபதி ஷிராணி திலகவர்த்தனவின் தலைமையில் நியமிக்கப்பட்ட ஆயுதக் கொள்வனவுகள் தொடர்பாக ஆராய்வதற்கான ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் வாசுதேவ நாணயக்கார கேள்வியெழுப்பினார்.
இதற்கு பிரதமர் சார்பில் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா, 2005ஆம் ஆண்டு வரை இலங்கை அரசால் கொள்வனவு செய்யப்பட்ட அதிக பெறுமதிவாய்ந்த ஆயுதங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 27-04-2006 ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்த ஆணைக்குழுவின் அறிக்கை 2008ல் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிக்கை செயலகத்திலிருந்து காணாமல் போயுள்ளது. ஜனாதிபதி செயலக செயலாளர், மேலதிக செயலாளரால் உயர்நீதிமன்ற நீதிபதியாகவிருந்த ஷிராணி திலகவர்த்தனவுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு இன்றுவரை பதில் இல்லை என்று தெரிவித்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி செயலகத்திலிருந்து இந்த அறிக்கை காணாமல் போயுள்ளது. இந்த அறிக்கையுடன் வாகனங்கள், பொருட்களும் காணாமல் போயுள்ளன.
இந்த அறிக்கை தொடர்பில் தற்பொழுது பிரதியமைச்சராகவிருக்கும் அஜித்.பி.பெரரேரா எதிர்க்கட்சியில் இருக்கும்போது கேள்வியெழுப்பியபோதும் அப்போது ஆளும் கட்சியின் பிரதம கொரடாவாக இருந்த தினேஷ் குணவர்த்தன அறிக்கை காணாமல் போயிருப்பதாகக் கூறியிருந்தார்.
காணாமல் போன இந்த அறிக்கை தொடர்பில் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவிடம் முறைப்பாடு செய்ய எதிர்பார்க்கவில்லை. இதனைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை பொலிஸாரிடம் கையளிப்பதற்கு பாராளுமன்றத்தினால் தீர்மானித்து, குறித்த அறிக்கையை கண்டுபிடிக்குமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளோம் என்றார்.
இதேவேளை, குறித்த அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரதியமைச்சர் அஜித்.பி.பெரேரா தெரிவித்தார்.