Breaking News

6000 பேர் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவர்: கல்வி அமைச்சர்

ஆசிரியர் பற்றாக்குறையினையை நிவர்த்தி செய்யும் நோக்கில் 6000 பேர் புதிதாக ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத் துறை, கல்வி, உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கல் அமைச்சுகளுக்கான வரவு – செலவுத்திட்ட ஒதுக்கீடுகள் குறித்த குழுநிலை விவாதம் இன்றைய தினம் இடம்பெறுகின்றது.

இந்த குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.இதன்போது உரையாற்றிய அவர், கல்வி நிர்வாக சேவையில் 852 வெற்றிடங்கள் நிலவுகின்றன. எதிர்வரும் காலங்களில் அவற்றை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

2009ம் ஆண்டிலிருந்து அதிபர் சேவைக்கான ஆட்சேர்ப்பு இடம்பெறவில்லை. இதுவரையில் அதிபர் தரத்திற்காக 3471 பரீட்சைகள் இடம்பெற்றுள்ளது.

அத்துடன், பாடசாலைகளில் நிலவும் விஞ்ஞான பாடத்திற்கான ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும். 6000 ஆசிரியர் வெற்றிடங்கள் எதிர்வரும் 6 மாதங்களுக்குள் நிவர்த்தி செய்யப்படும்.

மேலும், கல்வி நிர்வாக சேவையில் காணப்படும் 1190 பதவி வெற்றிடங்கள் அரச சேவைகள் திணைக்களத்தின் அனுமதி கிடைத்தவுடன் பூரணப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.