Breaking News

பொய்யான தகவல்களை நம்பவேண்டாம் - சென்னை வானிலை மையம் அறிவிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது சென்னைக்கு மழையால் பேராபத்து இருப்பதாக செய்திகள் உலா வருகிறதே? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:–

‘‘சென்னையில் மீண்டும் கனமழை பெய்யும், சென்னை நகரமே மூழ்கிப்போகும் அளவுக்கு தொடர் மழை பெய்யும், ஜோதிடம் பொய்க்காது, பல்வேறு ஆதாரமான தகவல்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன’’ என்று செல்போன் எஸ்.எம்.எஸ். மற்றும் ‘வாட்ஸ்–அப்’ மூலம் தகவல் அதிகமாக பரப்பப்பட்டு வருகின்றன.

இந்த தகவல்களில் எந்த உண்மையும் கிடையாது. 7–திகதி (திங்கட்கிழமை) வரை அனேக இடங்களில் மழை உண்டு என்றும், 8–திகதிக்கு பிறகு படிப்படியாக மழை குறையலாம் எனவும்தான் வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. எனவே கனமழை, புயல், பெருவெள்ளம் என்றெல்லாம் வரும் தவறான தகவல்களை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம். இதில் எந்த அளவும் உண்மை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் கனமழை பெய்யுமா? என்ற இன்னொரு கேள்விக்கு அவர் கூறியதாவது:–

வாய்ப்பு இல்லை,குமரி கடல் பகுதியில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தின் அனேக இடங்களில் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களுக்கு மட்டுமே கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை. சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

சென்னையை நோக்கி கிழக்கில் இருந்து நிறைய மேகக்கூட்டங்கள் வந்து கொண்டிருப்பதால், விட்டு விட்டுத்தான் மழை பெய்யும். காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்போது மட்டும் மழை அதிகமாக பெய்யுமே தவிர, சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்