வியாழேந்திரனிற்கு எதிராக மட்டு.கிராம உத்தியோகஸ்தர்கள் சங்கம் போர்க்கொடி
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகஸ்தர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் வீட்டுத் திட்டங்களின்போது, குறிப்பாக கிராம உத்தியோகஸ்தர்கள், பணத்தினை வாங்கி விட்டு மோசடி செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கருத்தால் அதிருப்தி அடைந்துள்ள அந்த சங்கம் நேற்று வியாழக்கிழமை மாலை கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ள கருத்தை எமது மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகஸ்தர்கள் சங்கம், வன்மையாகக் கண்டிக்கின்றது. எத்தனையோ நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிரேஸ்ட அமைச்சர்கள், இதுவரையில் தெரிவிக்காத கருத்தை, இவர் தெரிவித்துள்ளார்.
அவர் எங்கே எப்போது என்பதைத் நிருபிக்க வேண்டும், நிருபீக்கா விட்டால், அவரது கருத்தை வாபஸ்பெற வேண்டும், என எமது சங்கம் கேட்டுக்கொள்வதுடன், இவ்விடயம் தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன், மற்றும், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், ஆகியோருக்கும், இவ்விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.