Breaking News

வடக்கில் காடுகள் அழிப்பை ஆராய அதிகாரிகள் குழு – சபையில் ஜனாதிபதி தெரிவிப்பு

வடக்கில் நடந்து வரும் சட்டவிரோத காடழிப்பு, மணல் அகழ்வு மற்றும், மீள்குடியேற்றம் தொடர்பாக நேரடியாகஆராய அதிகாரிகள் கொண்ட குழுவொன்று அமைக்கப்படும் என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

அடுத்த வாரம் வடக்கிற்குச் செல்லும் இந்தக் குழுவுடன் எதிர்க்கட்சி, ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

இந்தக் குழு இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் அந்த அறிக்கையின் பின்னர் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். அடுத்த வாரம் வடக்கிற்குச் செல்லும் குழுவுடன் இணைவதற்கான அழைப்பை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுத்து மூலம் அனுப்புவதாகவும், போக்குவரத்து வசதிகளும் செய்து கொடுப்பதாகவும் சிறிலங்கா அதிபர் குறிப்பிட்டார்.

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதிகளில் மீள்குடியேற்றம் என்ற பெயரில் சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் பிமல் ரத்னாயக்க ஆகியோர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்தே, ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலமே வடக்கில் காடுகள் அழிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தன என்றும், அதிகாரிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அரசியல் ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.