HNDA மாணவர்கள் விவகாரம் - இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரிகை
சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட கிருலப்பணை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றக்கூடிய பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒரு மாத காலத்திற்குள் குறித்த குற்றப்பத்திரிகை சம்பந்தமாக விளக்கம் தெரிவிக்குமாறு இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் பரிசோதகருக்கு அறிவித்தல் விடுத்துள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்தார்.
கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா மாணவர்கள் (HNDA) தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் குறித்த பொலிஸ் பரிசோதகர் கடந்த வியாழக்கிழமை சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டார்.
பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய பொலிஸ் மா அதிபரினால் இவரின் சேவை இடைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில் குற்றப்பத்திரிகை தொடர்பில் குறித்த பொலிஸ் பரிசோதகர் விளக்கமளித்ததன் பின்னர் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தீர்மானிக்கப்படும் என்று பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்தார்.
அத்துடன் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள காலப்பகுதிக்குறிய ஊதியத்தில் பாதித் தொகையை பெற்றுக் கொள்வதற்கு கோரிக்கை முன்வைக்க குறித்த பொலிஸ் பரிசோதகருக்கு முடியும் என்றும் ஆரியதாச குரே தெரிவித்தார்.