தேவைகளை நிறைவேற்ற முடியாவிடின் தோட்ட மக்களிடம் ஏன் வாக்கு கேட்கின்றீர்கள்
மலையக தோட்டத் தொழிலாளர்களின் தேவைகளை கம்பனிகளே நிறைவேற்ற வேண்டும் என்றால் ஏன்
தேர்தலில் அம்மக்களிடம் வாக்கு கேட்கின்றீர்கள்? அம்மக்களை கம்பனிகளுக்கு வாக்களிக்க சொல்லுங்கள் என நேற்று சபையில் ஜே.வி.பி. எம்.பி. அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மலையக தோட்டத்தொழிலாளர்கள் இன்றும் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். எனவே அவர்களையும் மனிதர்களாக மதிக்கும் நிலைமையை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சுகாதார அமைச்சு மற்றும் தொழில் மற்றும் தொழிலாளர் உறவுகள் தொடர்பான அமைச்சுக்களின் குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அநுர குமார திஸாநாயக்க எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
சபையில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
மலையக தோட்டத் தொழிலாளர்களும் இந்நாட்டின் உழைக்கும் வர்க்கத்தினரை சேர்ந்தவர்களே என்பதனை புரிந்துகொள்ளுங்கள். ஆனால் அவர்கள் தொடர்பில் எந்த விதமான அக்கறையும் காட்டப்படுவதில்லை.
இன்றும் அவர்களது நாள் சம்பளம் ரூபா 450 ரூபா. அத்தோடு கொடுப்பனவுகள் இணைந்தாலும் ரூபா 620 கிடைக்கின்றது. இத்தொகையை கொடுப்பனவாக பெற்றுக் கொண்டு வாழ்க்கையை நடத்த முடியுமா? ஏன் அம்மக்களுக்கு மட்டும் அநீதி இழைக்கப்படுகிறது.
மலையக தோட்டத் தொழிலாளர்கள் இன்று வறுமைக் கோட்டில் வாழும், சுகாதார உரிமைகள் மறுக்கப்பட்ட, வாழ்வாதார உரிமைகள் மறுக்கப்பட்ட, இந்நாட்டின் அடிமைப்படுத்தப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட மக்களாக வாழ்கின்றனர்.
இம்மக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றுமாறு அரசை கேட்டால் தோட்ட கம்பனிக்காரர்களே அதற்கு பொறுப்பு, அவர்களிடம் கேளுங்கள் என்கிறீர்கள். அப்படியென்றால் தேர்தலில் அம் மக்களின் வாக்குகளை ஏன் கேட்கின்றீர்கள்.
அம் மக்களது வாக்குகளையும் கம்பனிக்காரர்களுக்கே கொடுங்கள் என்று சொல் லலாமே. மலையகத் தோட்டத் தொழி லாளர்கள் அடிமைகள் என்ற நிலைப் பாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். ஏனைய உழைக்கும் வர்க்கத்தினர் அனு பவிக்கும் உரிமைகள் அவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றார்.