திருமலை கடற்படை முகாம் குறித்து அரசாங்கம் விளக்கம்
திருகோணமலை கடற்படை முகாமுக்குள் ஐ.நா.குழுவினரை அனுமதித்திருந்தோம். இதில் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. அமெரிக்காவின் குழுவொன்றை அனுமதித்திருந்தாலே குற்றமாகும். மேலும் ஐ.நா.வுடன் இணைந்திருக்காவிட்டால் திருகோணமலை கடற்படை முகாமில் இரகசிய வதை முகாம் ஒன்று இருப்பதாகவே சர்வதேசத்துக்கு தகவல் வழங்கியிருப்பர் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரத்ன நேற்று தெரிவித்தார்.
ரகர் வீரர் தாஜீதீனின் படுகொலை தொடர்பான சி.சி.டிவி கமரா வீடியோக் காட்சிகள் அழிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அவற்றை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியும். தாஜீதீன் விவகாரத்தை மூடிமறைப்பதற்கான தேவைகள் முன்னைய ஆட்சியாளர்களுக்கே இருக்கிறதே தவிர எமது அரசாங்கத்திற்க்கு கிடையாது என்றும் அவர் கூறினார்.
இதேவேளை இனப்படுகொலை என்று அங்கு எதுவும் இடம்பெறவில்லை. இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பான உள்ளக விசாரணைகள் இடம்பெறும். அதில் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் ராஜித்த மேலும் கூறுகையில்,
எமது நாட்டின் இராணுவத்தினரையும், இராணுவப்படையினரையும் முன்னேற்றுவதனை அடிப்படையாகக் கொண்டு பிரித்தானிய அரசாங்கம் ஆறு மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களை உதவியளித்துள்ளது. இதனைக் கண்காணிப்பதற்கென பிரித்தானியா தனது அதிகாரி ஒருவரையும் நியமித்துள்ளது. இச் செயற்பாட்டால் இலங்கையில் பாதுகாப்பிற்கோ அல்லது இறைமைக்கோ எந்தவிதமான அச்சுறுத்தலும் கிடையாது.
பொது எதிரணி என்று கூறிக் கொள்வோர், யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் அமெரிக்காவின் உதவியை நாடியிருந்தபோது அமைதியாக இருந்தனர். ஆனால் இப்போது கூச்சலிடுகின்றனர். ஆனால் அப்போது அமெரிக்காவிடம் உதவியை நாடியிருந்ததைப் போன்ற ஒரு அம்சமாகவே இதனைப் பார்க்கின்றோம்.
மேலும் ஐக்கிய நாடுகள் எனும் போது நாமும் (இலங்கையும்) அதில் இணைந்திருக்கின்றோம். அப்படியானால் நாமும் ஐ.நா.வாகவே இருக்கின்றோம். ஐ.நா. எனும் வலயமைப்புக்குள் பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் நாமும் இணைந்திருக்கின்றோம்.
அந்த வகையில் திருகோணமலை கடற்படை முகாமுக்குள் நுழைவதன் பொருட்டு ஐ.நா. விசாரணைக்குழுவுக்கே நாம் அனுமதியை வழங்கியிருந்தோம். அமெரிக்காவின் விசாரணைக்குழுவுக்கு நாம் அனுமதி வழங்கியிருந்தால் அதனைத் தவறாக கூற முடியும்.
திருகோணமலை கடற்படை முகாமுக்குள் செல்வதற்கு ஐ.நா. விசாரணை குழுவுக்கு நாம் அனுமதி மறுத்திருந்தோமானால் அது தவறாக அமைந்திருக்கும். அத்துடன் திருமலை கடற்படை முகாமுக்குள் இரகசிய முகாம் ஒன்று இருப்பதாக சர்வதேசத்துக்கு தகவல் வழங்கப்பட்டிருக்கும். ஆகவே ஐ.நா. குழுவை திருகோணமலை கடற்படை முகாமுக்குள் அனுமதித்திருந்தமை எந்த விதத்திலும் நாட்டுக்கோ, பாதுகாப்புக்கோ, இறைமைக்கோ அச்சுறுத்தல கிடையாது என்றார்.
இதேவேளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷவினால் தெரிவிக்கப்பட்டதான கருத்து எனக்கூறி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் பிரதானியாக செயற்பட்டு வந்த நகுலேஸ்வரன் என்பவரை முன்னைய அரசாங்கமே விடுவித்தது. மகளிர் அணித்தலைவியாக செயற்பட்டு வந்தவரும் அண்மையில் மரணித்தவருமான தமிழினியையும் விடுதலை செய்தது முன்னைய அரசாங்கமேயாகும்.
அதுமாத்திரமின்றி பிரபாகரனை விட முதலில் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டியவர் கே.பி. யாவார். வடக்கு இளைஞர்களின் கைகளில் ஆயுதங்களை தவழச் செய்த குற்றவாளி அவரே. கே.பி. பிரபாகரனுக்கு அடுத்ததாக புலிகளின் அமைப்பின் தலைவராக செயற்பட்டார். அவ்வாறானவரை அழைத்து வந்த முன்னைய ஆட்சியாளர்கள் அவருக்கு விருந்து படைத்து உண்டு மகிழ்ந்தனர்.
இவ்வாறு செயற்பட்டவர்கள் இன்று கத்திக் கொண்டிருக்கின்றனர். எனவே இதுபற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.
மேலும் ரகர் வீரர் தாஜீதீனின் படுகொலையுடன் தொட்புபட்டதான சி.சி.டிவி கெமரா வீடியோ காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன. தாஜீதீனின் கொலையை மூடிமறைப்பதற்கான தேவை முன்னைய ஆட்சியாளர்களுக்கே இருக்கிறது. எமது அரசாங்கத்திற்கு அப்படியான தேவை கிடையாது.
இலங்கையில் பேர்க்குற்றம் என்று எதுவும் இடம்பெறவில்லை. பரிந்துரைகளின் பிரகாரம் உள்ளக குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.