விடுவிக்கப்பட்ட கைதிகளை புலனாய்வுப் பிரிவினர் கண்காணித்து வருகின்றனர்!
பிணையில் விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை, புலனாய்வுத்துறை அறிக்கை, பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவு அறிக்கை, சிறைச்சாலை ஆணையாளர் அறிக்கை ஆகியவற்றை ஆராய்ந்த பின்னரே குறித்த நபர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், அவர்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, தேசிய பாதுகாப்பிற்கு இடையூறாக செயற்படும் அரசசார்பற்ற நிறுவனங்கள், நபர்கள் மீது தடை விதிக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரச சார்பற்ற நிறுவனங்கள், தனி நபர்கள் மீது கடந்த கால அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடையை தற்போதைய அரசாங்கம் நீக்கியுள்ளது. எனினும், எதிர்காலத்தில் இந்த அமைப்புக்களோ, தனி நபர்களோ நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு இடையூறாக செயற்பட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் அந்தத் தடைகளை அமுல்படுத்துவார் என்று அமைச்சர் கூறினார்.
அத்துடன், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் எதிர்காலத்தில் பயங்கரவாத அல்லது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக செயற்பட்டால் அவர்கள் மீண்டும் கைதுசெய்யப்படுவர் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.