விடுதலைப்புலிகளில் பிரபாகரனை விடவும், கே.பியே தண்டிக்கப்பட வேண்டியவர் – ராஜித
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் பிரபாகரனை விடவும், கே.பியே தண்டிக்கப்பட வேண்டியவர் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களான நகுலேஷ்வரன், தமிழினி, கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை விடுதலை செய்தது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், சிறு குற்றங்களை இழைத்த கைதிகளை தற்போது விடுதலை செய்ய முயற்சிக்கின்ற நிலையில், அது குறித்து அவர்கள் தவறான கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை வலுப்படுத்துவதற்காகவும், அவர்களுக்கான ஆயுதங்களை வெளிநாடுகளிலிருந்து விநியோகிப்பதற்காகவும் கே.பி பாரிய உதவிகளை வழங்கியதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறித்த அவையில் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை விடவும், கே.பி பாரிய குற்றங்களை இழைத்தவராக கருதப்படுகின்றார் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இதன் பிரகாரம், கே.பியை கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கான தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கூறினார்.
இதேவேளை, திருகோணமலை முகாம் தாக்கப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பாரிய குற்றங்களை முன்னெடுத்த புலிகள் அமைப்பின் முக்கிய பொறுப்பிலிருந்த நகுலேஸ்வரன் கடந்த அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்பட்டு சுதந்திரமாக நடமாடி வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.