ரோம் பிரகடனத்தில் கையெழுத்திட இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப்படவில்லை - பிரதமர் தெரிவிப்பு
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்கிய ரோம் பிரகடனத்தில் கையெழுத்திடுமாறு, இலங்கை அரசாங்கத்துக்கு எந்தவொரு அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், “ரோம் பிரகடனத்தில் அமெரிக்காவும் கூட கையெழுத்திடவில்லை. அதில் கையெழுத்திடுமாறு யாரும் எமக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. தெற்காசிய நாடுகள், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்கும் ரோம் பிரகடனத்தில் கையெழுத்திடுவதில்லை என்ற கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளன.
தமது சொந்த பிரச்சினைகளை உள்நாட்டு முறைமைகளின் கீழ் தீர்த்துக் கொள்வதே இந்த நாடுகளின் முடிவாகும்.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தாலும், அதுகுறித்து இலங்கையினால் விசாரணை செய்ய முடியும். 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தவுடன், அதுகுறித்த விசாரணை செய்வதாக ஐ.நாவுக்கு உறுதியளித்திருந்தது முன்னைய அரசாங்கம்.
அத்தகைய உறுதிமொழி கொடுக்கப்பட்டதால் தான், தற்போதைய அரசாங்கம் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அந்த தவறுகள் தற்போது களையப்பட்டு வருகின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.