ஜனவரியில் போர்க் குற்றம் தொடர்பான உள்ளக விசாரணைப் பொறிமுறை - விஜேதாஸ
மனித உரிமைகள் மீறல் மற்றும் போர்க் குற்றம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்ப தற்கு அமைக்கப்படுகின்ற உள்ளகப் பொறிமுறை தொடர்பான பேச்சுக்களை ஜனவரியில் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் இறுதியில் உள்ளகப் பொறிமுறையை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருவதால் இந்த நடவடிக்கை நிறைவுக்கு வந்த பின்னர், உள்ளகப் பொறிமுறையை அமைத்தல் தொடர்பான பேச்சுக்களை நடத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், வெளிவிவகார அமைச்சு, நீதியமைச்சு உள்ளிட்ட உயர்மட்டப் பேச்சுக்கள் நடத்தப்படும் என்று நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூசைன் ஆகியோர் அடுத்த வருடம் நடுப்பகுதியில் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இவர்களது விஜயங்களுக்கு முன்னரே உள்ளகப் பொறிமுறை விடயங்களை செயற்படுத்த அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்திற்கு அடுத்த பணியாக கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ளும் என்று அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.