Breaking News

அதி­யுச்ச அதி­காரப் பகிர்­வுடன் சமஷ்டி முறை­மையில் அர­சியல் தீர்வு அவ­சியம்! -சிவ­சக்தி ஆனந்தன் கோரிக்கை

எமது தாய­கத்தில் அதி­யுச்ச அதி­காரப் பகிர்­வு­ட­னான சமஷ்டி அடிப்ப­டை­யி­லான தீர்­வொன்­றையே நாம் கேட்­கின்றோம். புரை­யோடிப்போ­யுள்ள இனப்­பி­ரச்­சி­னைக்கு இதுவே நிரந்­தரத் தீர்­வாக அமையும். எனினும் முன்­னைய அர­சாங்கம் சர்­வா­தி­கா­ர­மாக செய்­த­வற்­றையே இன்றைய அர­சாங்கம் நல்­லாட்சி எனும் பெயரில் செய்து வரு­கின்­றது. 

அவ்­வா­றா­ன­தொரு அர­சாங்­கத்தைப் பாது­காக்கும் தார்­மீக கடமை எமக்­கில்லை. இதனை அனு­ம­திக்கும் அளவில் எமக்கு வாக்­க­ளித்­த­வர்கள் தார்­மீகத் தரம் தாழ்ந்­த­வர்­களும் அல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற 2016 ஆம் நிதி­யாண்­டுக்­கான வரவு செலவுத் திட்­டத்தின் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி மாந­கர மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி ஆகிய அமைச்­சுக்கள் மீதான குழு­நிலை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

சிவ­சக்தி ஆனந்தன் எம்.பி இங்கு மேலும் கூறு­கையில்,

செல்­வந்­தர்­களை மேலும் செல்­வந்­தர்­க­ளாக்­கு­வ­தையும் வறி­ய­வர்­களை மேலும் வறி­ய­வர்­க­ளாக்­கு­வ­தையும் நோக்­க­மாக கொண்ட இந்த வரவு செலவுத் திட்­டத்­தைப்­போன்றே மாகா­ணங்­க­ளுக்­கான நிதி ஒதுக்­கீட்­டிலும் வரு­மானம் மிக்க மாகா­ணங்­க­ளுக்கு அதிக ஒதிக்­கீடும் நிவா­ர­ணத்தை வேண்டி நிற்­கின்ற மாகா­ணங்­க­ளுக்கு குறைந்த ஒதுக்­கீ­டு­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

மாகாண சபைக்­கான நிதி ஒதுக்­கீட்­டிலும் வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் மாற்றான் தாய் மனப்­பான்­மை­யு­ட­னேயே நடத்­தப்­பட்­டுள்­ளன. நாம் சகோ­த­ரத்­து­வத்­துடன் கைகோர்த்து இணை­யாக நடப்­ப­தையே விரும்­பு­கின்றோம். மாறாக யாரையும் எமது தோள்­களில் சுமப்­ப­தற்கு நாம் தயா­ரில்லை.

எமது தாயக பிர­தே­சத்தில் அதி­யுட்ச அதி­கார பகிர்­வு­ட­னான சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான தீர்­வொன்றே இந்த நாட்டில் புரை­யோ­டி­போ­யுள்ள இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­தர தீர்­வாக அமையும் என்­பதை இந்த சபையின் கவ­னத்­திற்கு கொண்டு வரு­கின்றேன்.

இந்த நாட்டில் யுத்தம் நடை­பெற்ற காலத்தை விட அதன் பின்­ன­ரான காலப்­ப­கு­தி­களில் தொடர்ச்­சி­யாக நாட்டின் பாது­காப்­பிற்­கான நிதி அதி­க­ரித்து வந்­துள்­ளதை நாம் இந்த அவையில் சுட்­டிக்­காட்டி வந்­துள்ளோம்.

2016 ஆம் ஆண்­டிற்­கான வரவு செலவுத் திட்­டத்­திலும் 306.7 பில்­லியன் ரூபா (30 ஆயி­ரத்து 670 கோடி) பாது­காப்­பிற்­காக ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இங்கு ஒன்றை சுட்­டிக்­காட்ட விரும்­பு­கின்றேன் . கடந்த அர­சாங்­கத்தின் இறுதிப் பகுதி வரை சட்டம் ஒழுங்­கிற்கு என்று தனி­யான ஒரு அமைச்சு இருக்­க­வில்லை. அது பாது­காப்பு அமைச்­சி­டமே இருந்­தது.

இப்­பொ­ழுது அதற்­கான அமைச்சு தனி­யாக உரு­வாக்­கப்­பட்டு அதற்­கென 76.9 பில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. ஏற்­க­னவே பாது­காப்பு துறைக்­கான ஒதுக்­கீடு அதி­க­ரித்­தி­ருக்­கையில் மேல­தி­க­மாக சட்டம் ஒழுங்கு அமைச்­சிக்­கென்று தனி­யாக நிதி ஒதுக்­கப்­பட்­டி­ருப்­பது எத்­த­கைய சிக்­கன நட­வ­டிக்கை என்­பதை அர­சாங்கம் தான் இந்த சபைக்கும் மக்­க­ளுக்கும் தெளி­வுப்­ப­டுத்த வேண்டும்.

அடுத்த ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்­டத்தின் பாது­காப்­புக்­காக ஒதுக்­கப்­பட்­டுள்ள 306.7 பில்­லியன் ரூபா இலங்­கையின் வர­லாற்றில் இது­வ­ரை­யில்­லாத அதி­யுட்ச ஒதுக்­கீ­டாகும். இந்த வர­லாற்றுச் சாத­னையை புரி­வ­தற்கு அர­சாங்கம் நாட்டு மக்­களை கடன்­கா­ரர்கள் ஆக்­கி­யுள்­ளது. ஒன்­பது மாகா­ணங்­க­ளுக்கும் ஒதுக்­கப்­பட்­டுள்ள 237.9 பில்­லியன் நிதியை விட பாது­காப்­பிற்கு 67 வீதம் கூடு­த­லாக ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

எம்மை கடன்­கா­ரர்­க­ளாக்கி எமது வரிப்­ப­ணத்தில் எமது பகு­தியில் நிலைப்­பெறச் செய்­துள்ள இரா­ணு­வத்­திற்­கான இந்­நிதி ஒதுக்­கீட்டை நாம் எவ்­வாறு ஆத­ரிக்க முடியும்? இந்த நாட்டை யாரி­ட­மி­ருந்து பாது­காப்­ப­தற்­காக இவ்­வ­ளவு பெருந்­தொ­கை­யான மக்­களின் வரிப்­பணம் செல­வி­டப்­ப­டு­கி­றது? நிச்­ச­ய­மாக தற்­பொ­ழுது வெளி­நாட்டில் இருந்து இந்த நாட்­டிற்கு எந்­த­வித பாது­காப்பு அச்­சு­றுத்­தலும் இல்லை.

பெரும்­பான்மை மக்­களின் நன்­ம­திப்­பையும் ஆத­ர­வையும் உடைய அர­சாங்கம் என்றால் மக்­களின் பாது­காப்­பிற்கு இவ்­வ­ளவு பாரிய தொகை தேவை இல்லை. சொந்த நாட்டு மக்­க­ளிடம் இருந்து தன்னைப் பாது­காக்க விரும்பும் அர­சாங்கம் என்றால் நிச்­சயம் இத்­தொகை தேவைப்­படும்.

ஆனால் அவ்­வா­றான ஒரு அர­சாங்­கத்தை மக்­க­ளிடம் இருந்து பாது­காக்கும் தார்­மீகக் கடமை எமக்­கில்லை. எம்மைத் தெரிவு செய்த மக்கள் அதனை அனு­ம­திக்­கவும் மாட்­டார்கள். அதை அனு­ம­திக்கும் அள­விற்கு அவர்கள் தார்­மீகத் தரம் தாழ்ந்­த­வர்­களும் இல்லை.

போரினால் பாதிக்­கப்­பட்ட எமது மக்­க­ளுக்கு ஏற்­பட்ட உயி­ரி­ழப்பு சொத்­தி­ழப்பு பெண்­களைத் தலை­மைத்­து­வ­மாகக் கொண்ட குடும்­பங்­களின் வாழ்­வா­தாரத் தேவைகள் முறை­யான மீள்­கு­டி­யேற்றம் போரினால் அங்­க­வீ­ன­மாக்­கப்­பட்­ட­வர்­களின் வாழ்­வா­தாரம் போன்ற இன்­னோ­ரன்ன விட­யங்­களில் முந்­தைய அர­சாங்கம் செய்த அதே புறக்­க­ணிப்­பையே இந்த அர­சாங்­கமும் செய்­தி­ருக்­கி­றது.

முந்­தைய அர­சாங்கம் சர்­வ­தி­கா­ர­மாகச் செய்­த­வற்­றையே இந்த அர­சாங்கம் நல்­லாட்சி என்ற பெயரில் தொடர்­கின்­றது. இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­தரத் தீர்வைக் காண்­ப­தை­வி­டுத்து இந்த நாட்டை மாறி­மாறி ஆட்சி செய்­த­வர்­களைப் போன்றே இந்த அர­சாங்­கமும் பாது­காப்பைப் பலப்­ப­டுத்­து­வது ஏன்? நல்­லாட்சி என்­பது பேச்சில் இன்றி செயலில் இருக்க வேண்டும்.

இந்த நாட்டை ஆட்சி செய்த எந்­த­வொரு ஜனா­தி­ப­தியோ அல்­லது பிர­த­மரோ தமிழ் மக்­களின் மனங்­களை வெற்றிக் கொண்­ட­வர்­க­ளாக இருந்­த­தில்லை. இந்­நாட்டின் இனப்­பி­ரச்­சினை கார­ண­மாக பல இலட்­சக்­க­ணக்­கான தமிழ் மக்கள் தமது உயிர்­களை இழந்­துள்­ளனர். பல்­லா­யி­ரக்­க­ணக்­கான சொத்­துக்­களை அழிக்­கப்­பட்­டுள்­ளன.

பல்­லா­யி­ரக்­க­ணக்­கான இளைஞர் யுவ­திகள் வாழ வழி­யின்­றி­யி­ருக்­கின்­றனர். ஆயி­ரக்­க­ணக்­கான குழந்­தைகள் பெற்­றோரை இழந்து தவிக்­கின்­றன . ஆனால் மாகாண சபைக்­கான அதி­கா­ரங்கள் பறித்­தெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

இது சிறிய நாடு வடக்கு கிழக்­கிற்கு சமஷ்டி அல்­லது சுயாட்சி வழங்­கினால் நாடு தனி­யானப் பிரிந்­து­விடும் என்றும் இந்த சிறிய நாட்டில் மாகா­ணத்­திற்கு அதி­கா­ரங்­களை வழங்­கி­விட்டால் மத்­திய அர­சாங்­கத்­திற்கும் மத்­திய அமைச்­சர்­க­ளுக்கும் என்ன வேலை? என்றும் அமைச்­சர்­களும் அதி­கா­ரி­களும் கேட்­கின்­றனர்.

நாங்கள் வடக்கு கிழக்­கிற்கு மட்­டுமே சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான அர­சியல் தீர்வைக் கோரு­கின்றோம். இந்த நாட்டின் முழு­மைக்கும் அதனைத் கொடுப்­பதா? வேண்­டாமா? என்­பதை நீங்­களே தீர்­மா­னி­யுங்கள்.

எங்­க­ளுக்கு என்ன வேண்டும் என்­ப­தைத்தான் நாங்கள் கேட்க முடியும். இது நாட்டைப் பிள­வுப்­ப­டுத்­து­வதோ அல்­லது நடை­முறைச் சாத்­தி­ய­மற்­றதோ அன்று. அவ்­வாறு கூறு­வ­தா­னது எமக்கு வியப்­பை­ய­ளிக்­கின்­றது.

திவி­நெ­கும சட்ட மூலத்தை இந்த அர­சாங்கம் உட­ன­டி­யாகத் திரும்பப் பெற­வேண்டும். நல்­லி­ணக்கம் என்­பது செய­லி­லேயே தங்கியுள்ளது. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மாகாண சபைகளுக்கு நிதியொதுக்கீடு செய்யப்படுகையில் இந்த வரவு செலவுத்திட்டத்தை எத்தகைய நல்லெண்ண அடிப்படையில் ஆதரிப்பது?

நல்லிணக்கமும் நல்லெண்ணமும் ஒரு தரப்பில் இருந்து மட்டும் வந்தால் போதாது. அது இரண்டு தரப்புக்கும் பொதுவானது. நாம் எமது நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் சுதந்திரத்திற்கான போராட்டத்திலிருந்து இன்று வரை வெளிப்படுத்தியே வந்துள்ளோம்.

இந்நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் ஒடுக்குமுறைகளை மற்றொரு பங்குதாரர்களான சிங்கள சகோதரர்களுக்கு எடுத்துச் சொல்லி, தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை வழங்கி அனைவரும் ஒன்றுபட்டு இத்தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வழிவகைகளைச் செய்ய இந்த அரசாங்கம் முன்வர வேண்டும் என்றார்.