இலங்கை அணியினையும் சூதாட்டத் தரகர்கள் அணுகியமை உறுதி
இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்களான ரங்கண ஹேரத் மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோரை சூதாட்ட தரகர்கள் அணுகியமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஒக்டோபர் மாதம் காலி மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின்போது ரங்கண ஹேரத் மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோரை சூதாட்ட தரகர்கள் அணுகியதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் குறித்த தகவலை குறித்த இரு வீரர்களுமே இலங்கை கிரிக்கட் சபையின் ஊழல் தடுப்பு பிரிவுக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட இலங்கை கிரிக்கட் சபையின் ஊழல் தடுப்பு பிரிவினர் அதனை உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச கிரிக்கட் சபையின் விதிமுறைகளுக்கு அமைய கடுமையான விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் மேலதிக விபரங்கள் எவையும் பகிரங்கப்படுத்தப்பட மாட்டாது எனவும் இலங்கை கிரிக்கெட் சபை மேலும் அறிவித்துள்ளது.