வடிவேல் சுரேஸின் செயற்பாடு ஒரு நாடகம் - ஆறுமுகன் தொண்டமான் விமர்சனம்
நாடாளுமன்ற வளாகத்தினுல் "பெட்ரோல்" எரிபொருளை கொண்டுசெல்ல முடியாதென தெரிந்தும் மக்களை ஏமாற்றுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாம் தீக்குளிக்கப்போவதாக அறிக்கை விட்டு நாடகம் ஆடியுள்ளதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அரசியல் இலாபம் தேடும் நோக்கில் மலையக இளைஞர் யுவதிகளின் எண்ணங்களில் தீய எண்ணங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தலைமைத்துவம் என்பது தன் சார்ந்த சமூகத்தின் வழிகாட்டியாக இருக்க வேண்டும் எனவும், வெறும் அறிக்கையின் ஊடாக எதிர்கால சமூகத்தினரிடம் பிழையான எண்ணங்களை வளர்த்துவிட வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வீர வசனம் பேசி மலையக இளைஞர் யுவதிகளின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் எனவும், இவரை சமாதானப்படுத்தி நாடாளுமன்றத்திற்குள் அழைத்து சென்றதாக அறிக்கை விட்ட புதிய கூட்டணி என சொல்லிக்கொள்பவர்களும் இதனை மறந்துவிடக் கூடாது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், கடந்த 19ஆம் திகதி இரண்டாயிரத்து 500 ரூபா கொடுப்பனவு தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படுமென தீர்மனிக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
இத்தீர்மானமானது கடந்த 18ஆம் திகதி முதலாளிமார் சம்மேளனத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மனிக்கப்பட்ட விடயம் எனவும், அன்றைய தினமே இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்ததாகவும் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் கடந்த 19ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்திற்குள் தீக்குளிக்க முயற்சித்தவேளை காவற்துறையினர் அவரை தடுத்து நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.