Breaking News

கூட்டமைப்பினர் மீது விமர்சனம் - நாடாளுமன்றில் முரண்பட்ட டக்ளஸ் மற்றும் சுமந்திரன்

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மீதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதையடுத்து கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவுடன் முரண்பட்டார்.

எனினும் டக்ளஸ் தேவானந்தா சுமந்திரனின் கருத்துக்கள் தொடர்பில் எதுவும் கூறாது தனது உரையைத் தொடர்ந்தார்.

உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா 23 (2) இன் கீழ் கேள்வியெழுப்புகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், எதிர்க்கட்சித் தலைவரையும் விமர்சிக்கிறார் இது பொருத்தமற்றது என்றும் சுமந்திரன் எம்.பி. பிரதிசபாநாயகரிடம் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமர்வின்போது 23 (2) இன் கீழ் கேள்வியொன்றை எழுப்பிய யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கோப்பாய் மாணவன் செந்தூரனின் மரணம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனப்போக்கை கடைப்பிடித்து வருவதாக விமர்சனங்கள் எழுகின்றன. அக்கட்சியின் உறுப்பினர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் என்றும் கூறினார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பியான எம்.ஏ. சுமந்திரன், நாடாளுமன்ற நிலையியற்கட்டளையின் 23 (2) இன் கீழான கேள்வியொன்றினை அரசாங்கத்திடம் பதிலை எதிர்பார்த்து எழுப்புவதே மரபாகும்.

எனினும் மாற்றுக் கட்சியினை விமர்சிக்க முடியாது. டக்ளஸ் தேவானந்தாவின் கேள்வியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பதும், எதிர்க் கட்சித் தலைவரை விமர்சிப்பதும், நிலையியல் கட்டளை 23 (2) இன் விதிகளுக்கு முரணானதாகும். எனவே இதனை ஏற்க முடியாது என்றார்.

இதன்போது குறுக்கிட்ட பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் அவரால் இப்படியொரு கேள்வியை எழுப்ப முடியும் என்றார். இதனையடுத்து எழுந்த சுமந்திரன் எம்.பி 23(2) இன் கீழ் கேள்வியெழுப்பும் போது அரசாங்கத்திடமே கேட்க வேண்டும்.

அரசாங்கமே பதிலளிக்க வேண்டும். இருப்பினும் பதில் வழங்கும் உரிமையற்ற பிறிதொரு கட்சியை விமர்சிக்க முடியாது. அத்துடன் கட்சித் தலைவர் பதவியை துஷ்பிரயோகம் செய்ய முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை சபை முதல்வர் கூறுகையில், டக்ளஸ் தேவானந்தவால் எழுப்பப்படுகின்ற கேள்வி தொடர்பில் அரசாங்கத்திற்கு பதிலளிக்க முடியும் என்கின்ற போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக விமர்சிப்பதற்கு அரசாங்கத்தால் பதிலளிக்க முடியாது என்றார்.

இதனையடுத்து டக்ளஸ் தேவானந்தாவுக்கு அவரது கேள்வியை சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.