இறுதிக்கட்ட போரில் இனப்படுகொலை நடைபெறவில்லை என்பதை மூடி மறைக்க அரசாங்கம் தீவிர முயற்சி
இறுதிக்கட்ட போரில் தமிழ் இனப்படுகொலை நடைபெறவில்லை என்பதை மூடி மறைப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்துக்கு அமைவாக போர்க்குற்ற விசாரணையை ஆரம்பிப்பதற்கு முன்னர் இனப்படுகொலை இல்லை என்பதை மேலும் நிரூபிக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருப்பதாகவும் இந்த விடயத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒத்துழைப்பை பெறுவதற்கு அரசாங்கம் முயற்சி எடுப்பதாகவும் கூறப்படுகின்றது.
இனப்படுகொலை என்பதை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சம்பந்தன், பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் நேரடியாக ஏற்கவில்லை. ஆனாலும் வேறு பொது அமைப்புகள், புலம்பெயர் அமைப்புகள் ஆகியவற்றின் அழுத்தங்களினால் விரும்பியோ விரும்பாமலோ இனப்படுகொலை என்பதை கூற வேண்டிய கட்டாய நிலைமைக்குள் அவர்கள் இருவரும் தள்ளப்பட்டிருப்பதாக மூத்த அரசியல்வாதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலைக்கான ஆதாரங்களை திரட்டி வருவதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் ஜபிசி தமிழ் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளார். ஆகவே இனப்படுகொலை விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது என்றும் இதனால் அந்த விடயத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மூலமாகவே மூடி மறைக்க அரசாங்கம் ஏற்பாடுகளை செய்வதாகவும் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.
பிரதமர் ரணில் ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தில் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து பேசவுள்ளதாகவும் கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை இனப்படுகொலை விவகாரத்தை பிரதானப்படுத்தி வடக்கு கிழக்கு பகுதிகளில் ஆர்;ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தற்போது அமைதியாக இருப்பதாகவும் அதற்கான காரணம் புரியவில்லை என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.