Breaking News

மகிந்தவுக்கு 102 இராணுவத்தினரே பாதுகாப்பு வழங்குவதாக கூறுகிறார் அவரது பேச்சாளர்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த 500 இராணுவத்தினர் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதான செய்திகளில் உண்மையில்லை என்று மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் ரொகான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தற்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு 102 இராணுவத்தினரே பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். இவர்களில் 80 பேர் பாதுகாப்பு கடமையிலும். 22 பேர் நிர்வாக பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 500 இராணுவத்தினர் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளியான செய்தி தவறானது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆபத்தான விடுதலைப் புலிகளையும் அரசாங்கம் விடுதலை செய்யத் தொடங்கியுள்ளது.

ராஜபக்ச அரசாங்கம் 11 ஆயிரம் விடுதலைப் புலிகளை புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்தது. எனினும், தீவிரமான 200 தொடக்கம் 300 புலிகளை மட்டும், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தடுத்து வைத்திருந்தது.

இவர்களை விடுதலை செய்வதாக மகிந்த ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். இந்த நிலையில், மேலதிக படையினரை நியமித்து அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு.” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.