Breaking News

இயற்கையின் சீற்றத்தில் சிக்கி உயிரிழந்த தமிழக உறவுகளுக்கு சம்பந்தன் இரங்கல்

தமிழகத்தில் இயற்கையின் சீற்றத்தினால் தங்களது சொந்தங்கள் மற்றும் அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் குடும்ப உறவுகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த அனர்த்தத்தினால் தமது வாழ்வாதாரங்களையும் சொந்தங்களையும் இழந்த நிலையில், தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கும் மக்களது துயரில் தாமும் பங்கேற்பதாகவும் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தளர்வின்றி நிவாரணங்களை வழங்கிவரும் தமிழக அரசு, ஏனைய அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதுடன், இக்காலநிலை சீரடைந்து மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்ப பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், த.தே.கூட்டமைப்பானது தமிழகத்தில் இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் மிகுந்த கரிசனையுடன் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.