மண்டைத்தீவு படுகொலை - விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும்! சபையில் ஸ்ரீதரன் கோரிக்கை
கடந்த 1990ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலுள்ள மண்டைத்தீவு உள்ளிட்ட தீவகப் பகுதிகளில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி கொப்பேகடுவவினால் கடத்திச்செல்லப்பட்ட 70க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்களின் சடலங்கள் கிணறுகளில் புதைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர், அந்த இடங்கள் தோண்டியெடுக்கப்பட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் சபையில் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றிய போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அந்தக்காலகட்டத்தில் இராணுவத்தின் துணைப் படையாக செயற்பட்டார் என்று குற்றஞ்சாட்டிய ஸ்ரீதரன் எம்.பி, மண்டைத்தீவுப் படுகொலைகள் பற்றிய முறைப்பாடுகளின் கோப்புகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொலைத்துவிட்டதாகவும் கூறினார்.