தமிழர்களுக்கான தீர்வுடன் புதிய அரசியலமைப்பு விரைவில் - விஜேதாச
நாட்டின் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்கின்ற வகையிலான அரசியல் தீர்வுத்திட்டத்தை உள்ளடங்குகின்ற வகையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு உட்பட்டு தீர்வைக்காண்பதா அல்லது அதற்கு அப்பாற்பட்டு தீர்வுக்கு செல்வதா என்பது குறித்து இதுவரை தீர்மானம் எடுக்கப்படவில்லை. அனைத்து தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னரே இந்த விடயம் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும். இது தொடர்பில் அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து நடத்தப்படவுள்ள உள்நாட்டு விசாரணை செயற்பாடுகளில் எவ்விதமான தாமதங்களும் இல்லை. அதனை வெளிவிவகார அமைச்சு உரிய முறையில் முன்னெடுத்துவருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் தீர்வு விவகாரம் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து நடத்தப்படவுள்ள உள்நாட்டு விசாரணை செயற்பாடுகள் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த விடயம் குறித்து அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மேலும் குறிப்பிடுகையில்
தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு விவகாரத்தை அரசாங்கம் உரிய முறையில் முன்னெடுத்துவருகின்றது. அதாவது அரசியல் தீர்வு செயற்பாடானது விரைவில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் நிச்சயம் உள்ளக்கப்படும்.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்கின்ற வகையிலான அரசியல் தீர்வுத்திட்டம் உள்ளடங்குகின்ற வகையிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
அதாவது புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனவே விரைவில் புதிய அரசியமைப்பு உருவாக்கப்படும். அதனூடாக தமிழ் மக்களின் அரசியல் தீர்வு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.
கேள்வி தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுத்திட்டமானது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு உட்பட்டு முன்வைக்கப்படுமா? அல்லது அதனை நீக்கிவிட்டு புதிய முறைக்கு செல்வீர்களா?
பதில் அதனை தற்போது கூற முடியாது. அனைத்துக் கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னரே அதற்கான தீர்மானம் எடுக்க முடியும். அவ்வாறு முறைமை தற்போது எம்மிடம் இருந்தால் பேச்சுவார்த்தை நடத்தவேண்டிய தேவை இல்லையே? எனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னரே அது தொடர்பில் தீர்மானம் எடுப்போம். புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்கில் பாராளுமன்றத்தை அரசியலமைப்பை பேரவையாக மாற்றியமைப்போம்.
கேள்வி பாராளுமன்றத்தை அரசியலமைப்பை பேரவையாக மாற்றியமைப்பீர்கள்?
பதில் இது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது. அதனூடாக பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு அமைவாக முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணை செயற்பாடுகளில் ஏதாவது தாமதம் ஏற்பட்டுள்ளதா?
பதில் மனித உரிமை மீறல் குறித்து ஆராய்வதற்கான உள்ளக விசாரணை பொறிமுறை செயற்பாட்டில் தாமதங்கள் இல்லை. அவை உரிய முறையில் வெளிவிவகார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இது தொடர்பான மேலதிக தகவல்களை வெளிவிவகார அமைச்சிடம் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.
இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டத்தரணிகளைக்கொண்டு இலங்கை விசாரணை நடத்தவேண்டும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30வது கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
சர்வதேச நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் வழக்கறிஞர்கள் விசாரணையாளர்களுடன் இலங்கையில் கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த ப்படவேண்டும் என்று இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கலப்பு நீதிமன்றம் என்ற செயற்பாடு இடம்பெற்றிருக்கவில்லை.
குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்துதல் போன்றன தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32 கூட்டத் தொடரில் வாய்மூல அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பரிந்துரைகள் எவ்வாறு அமுல்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து 34 கூட்டத்தொடரில் முழு அளவில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுவது அவசியமாகும் எனவும் பிரேரணை வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை இது தொடர்பில் சர்வதேசத்துக்கு வாக்குறுதி அளித்துள்ள இலங்கை அரசாங்கம் உள்ளக விசாரணை பொறிமுறை முன்னெடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
அந்தவகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக உள்ளக விசாரணை பொறிமுறை ஒன்றை உருவாக்கப்போவதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் உள்ளக விசாரணை பொறிமுறை வடிவத்தை தயாரிப்பது தொடர்பான தேசிய மட்ட கலந்துரையாடல்களை விரைவில் நடத்தவுள்ளது.
அரசாங்கம் ஏற்கனவே தயாரித்துள்ள அடிப்படைத் திட்டத்தின் பிரகாரம் உள்ளக விசாரணை பொறிமுறை நான்கு பிரிவுகளை கொண்டதாக அமைந்துள்ளது. முதலாவதாக உண்மையை கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்படும். அதில் இரண்டு பிரிவுகள் இருக்கும். அதாவது மத தலைவர்களைக் கொண்ட ஒரு குழுவும் ஆணையாளர்களைக் ட ஒரு குழுவும் ஆணையாளர்களைக் கொண்ட ஒரு குழுவும் இயங்கும். பாதிக்கப்பட்ட மக்கள் இதன்மூலம் நீதியை பெறலாம். தென்னாபிரிக்காவின் ஆலோசனையுடன் இது முன்னெடுக்கப்படும்.
இரண்டாவதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் காணாமல் போனோர் தொடர்பில் அலுவலகம் ஒன்று அமைக்கப்படும். மூன்றாவதாக நீதிக்கான உரிமைக்காக நீதிமன்ற பொறிமுறை உருவாக்கப்படும். அடுத்ததாக இழப்பீடு பொறிமுறை உருவாக்கப்படும்.
இறுதியாக கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளை போன்ற எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாது இருக்க அரசியல் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இதுவே அரசாங்கம் திட்டமிட்டுள்ள உள்ளக விசாரணை பொறிமுறைக் கட்டமைப்பாகும்.