தமிழக மக்களுக்கு உதவ முன்வருமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு
வெள்ளத்தால் பேரழிவைச் சந்தித்துள்ள தமிழக மக்களை துயரில் இருந்து மீட்க அனைவரும் முன்வர வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, அண்மைய வாரங்களாக தமிழகத்தில் பெய்த பயங்கர மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகர் முழுமையாக சிதைந்து சின்னாபின்னமாகியுள்ளது.
ஒட்டுமொத்த மக்களினதும் வாழ்வாதாரங்கள், அசையும் அசையாச் சொத்துக்கள் பேரழிவைச் சந்தித்துள்ளது. இவ் வெள்ள அனர்த்தத்தில் உயிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், பாதிக்கப்பட்ட குடும்கங்களுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் ஆழந்த இரங்கலை தமிழ் ஈழத் தமிழ் மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஈழத்தில் தமிழ் மக்கள் இன அழிப்புக்கு உள்ளாக்கி கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது துடித்தெழுந்து எமது மக்களுக்காக போராடிய, எமது மக்களுக்காக தீக்குளித்து உயிர் துறந்த, இன்றும் எமது மக்களின் அரசியல் விடுதலைக்காக தொடர்ந்தும் உறுதியுடன் போராடி வருகின்ற எமது இரத்த உறவுகளை இந்தப் பேரழிவில் இருந்து மீட்டெடுப்பதற்காக உழைக்க வேண்டிய கடப்பாடு ஈழத் தமிழ் மக்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு.
சுமார் 50லட்சம் மக்களின் வாழ்க்கையை சீரழித்துள்ள இந்த பேரனத்தத்தில் இருந்து தமிழக உறவுகளுக்கு உதவ புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் ஈழத்திலுள்ள தமிழ் மக்களும் தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்க முன்வருமாறு வேண்டுகின்றோம்.
பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்காக உணவு நிவாரணம் மற்றும் மருந்துப் பொருட்களை சேர்த்து அனுப்புவதற்கான நடவடிக்கைகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆரம்பித்துள்ளது. பொது மக்கள் மற்றும் வர்த்தகர்களிடமிருந்து நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்கி ஒத்துழைக்குமாறு கோருகின்றோம்.