தடைநீக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் – ருவான் விஜேவர்த்தன
அண்மையில் தடை நீக்கப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தொடர்பான தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, அண்மையில் இலங்கை அரசாங்கத்தினால் தடைநீக்கப்பட்ட உலகத் தமிழர் பேரவை தனது சின்னத்தில் இன்னமும் தமிழீழ வரைபடத்தைக் கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, ”உள்நாட்டு, வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளுடன் கவனமாக ஆராயப்பட்ட பின்னரே, 8 புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டது.
இந்த அமைப்புக்களின் கடந்த மூன்று ஆண்டு கால செயற்பாடுகளை கண்காணித்தே தடை நீக்கம் பற்றிய முடிவு எடுக்கப்பட்டது.
இந்தக் காலப் பகுதியில் இவை பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்பு வைத்திருந்தனவா, நிதி உதவிகள் வழங்கினவா என்பது குறித்து ஆராயப்பட்டது. இதற்கென நாம் உயர் மட்டக் குழுவொன்றை அமைத்து அதன் பிரகாரமே நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.
வெளிவிவகார அமைச்சரை தலைவராகக் கொண்ட இந்தக் குழுவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் தளபதிகள் என பலர் உள்ளடக்கப்பட்டிருந்தனர். தடை நீக்கப்பட்ட போதிலும், உலகத் தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகளின் செயற்பாடுகளை நாம் தொடர்ந்து அவதானிப்போம்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.